ராகுலின் இரு வேறு முகங்கள்: அமித் ஷா விமர்சனம்

கால்நடைத் தீவன வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசியதை பாஜக
ராகுலின் இரு வேறு முகங்கள்: அமித் ஷா விமர்சனம்
Updated on
1 min read

கால்நடைத் தீவன வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசியதை பாஜக தேசியத் தலைவர் விமர்சித்துள்ளார். 
இந்தச் சந்திப்பு, ராகுல் காந்தியின் இரு வேறு முகங்களைக் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கோலார் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை பெறும் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களின் பதவி உடனடியாகப் பறிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. ஆனால், தண்டனை பெற்ற அரசியல்வாதிகளைக் காப்பாற்றும் நோக்கத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அவசரச் சட்டம் கொண்டுவர முற்பட்டது. அந்த அவசரச் சட்டத்தின் நகல்களை ராகுல் காந்தி கிழித்தெறிந்து, 'குற்றவாளிகளைக் காப்பாற்றுவது முட்டாள்தனமான முடிவு' என்றார்.
ஆனால், அதே ராகுல் காந்திதான், கால்நடைத் தீவன வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் லாலு பிரசாதை, அவர் சிகிச்சைப் பெற்ற தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று திங்கள்கிழமை நலம் விசாரித்தார். ராகுலின் இந்த நடவடிக்கை, அவரது இரு வேறு முகங்களைக் காட்டுகிறது.
இரட்டை நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு கட்சியால், கர்நாடகத்தில் நேர்மையான ஆட்சியைக் கொடுக்க முடியாது. ஒரு கட்சியின் தலைவர் ஊழலை ஆதரித்தால், எப்படி நல்லாட்சியைத் தர முடியும்?
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், லாலு பிரசாதின் ஆதரவின்றி வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. ஆகவேதான், லாலு பிரசாதை ராகுல் காந்தி சந்தித்துள்ளார் என்றார் அமித் ஷா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com