அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) விவகாரத்தை முன்வைத்து திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை வியாழக்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை, தலைவர் வெங்கய்ய நாயுடு தலைமையில் காலை கூடியதும், என்ஆர்சி விவகாரத்தை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரீக் ஓ பிரையன் எழுப்பினார். என்ஆர்சி பதிவேடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விளக்கம் கேட்டு தாக்கல் செய்த நோட்டீஸை நிராகரித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு வெங்கய்ய நாயுடு அளித்த பதில்:
இந்த விவகாரம் குறித்து பதில் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ராஜ்நாத் சிங் கடந்த 2 நாள்களாக மாநிலங்களவைக்கு வந்தார். அனைவரின் கருத்துகளையும் பொறுமையாகக் கேட்டறிந்த அவர் விளக்கம் அளிப்பதற்கு நீங்கள் வாய்ப்பளிக்கவில்லை.
காலையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட, என்ஆர்சி விவகாரம் குறித்து ராஜ்நாத் சிங் பதிலளிக்க வேண்டும்; எதிர்க்கட்சித் தலைவர்களை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அழைத்துப் பேச வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா ஆலோசனை தெரிவித்தார் என்றார் வெங்கய்ய நாயுடு.
அதைத் தொடர்ந்து பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத், ஒவ்வொரு அரசியல் கட்சியின் உறுப்பினரும் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது; ஆனால், அஸ்ஸாமைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பளிக்கவில்லை' என்று குற்றம் சாட்டினார். இதையடுத்து, விவசாயிகள் பிரச்னைகள் குறித்து விவாதிக்கலாம் என்று உறுப்பினர்களை வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார். ஆனால், உள்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தினார்.
இதனால், அவை உணவு இடைவேளை வரை ஒத்திவைக்கப்பட்டது. உணவு இடைவேளைக்குப் பிறகு மாநிலங்களவை மீண்டும் கூடியதும், அவையின் மையப்பகுதியில் திரண்ட திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள், அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். உள்துறை அமைச்சர் பதிலளிப்பார் என்று வெங்கய்ய நாயுடு உறுதியளித்த பிறகும், உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையை வெங்கய்ய நாயுடு நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீரனூரில் போட்மெயில் விரைவு ரயில் நின்றுசெல்ல எதிா்பாா்ப்பு

புனரமைத்தும் பூட்டிக்கிடக்கும் உடற்பயிற்சிக் கூடம்! பயன்பாட்டுக்கு கொண்டுவர எதிா்பாா்ப்பு

திண்டுக்கல் மாநகாரட்சிப் பகுதியில் 4 இடங்களில் ‘ஸ்பாஞ்ச்’ பூங்காக்கள்!






