க்ரீமி லேயர்' வரம்பு எஸ்சி/எஸ்டி ஊழியர்களுக்கு பொருந்தாது: மத்திய அரசு வாதம்
பதவி உயர்வில் க்ரீமி லேயர்' எனப்படும் முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கிடையாது என்ற வரம்பு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது
பதவி உயர்வில் க்ரீமி லேயர்' எனப்படும் முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கிடையாது என்ற வரம்பு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
பொருளாதார ரீதியாக எஸ்சி/எஸ்டி மக்கள் முன்னேறியிருந்தாலும் கூட, சமூகத்தில் அவர்களது பின்தங்கிய நிலையும், ஒடுக்கப்பட்ட ஜாதியினர் என்ற அடையாளமும் அவர்களை விட்டு விலகவில்லை என்றும் மத்திய அரசு கூறியது.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் குரியன் ஜோசஃப், ஆர்.எஃப்.நாரிமன், சஞ்சய் கிஷன் கெளல் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகிய ஐவர் அடங்கியஅரசியல் சாசன அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் ஆஜராகி, மேற்கண்ட வாதங்களை முன்வைத்தார்.
அரசு உயர் பதவிகளில் இடஒதுக்கீடு வழங்கும்போது முன்னேறிய வகுப்பினர் பலன் பெற முடியாது என்ற வரம்பின் கீழ் எஸ்சி/எஸ்டி மக்களுக்கு சலுகைகளை மறுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2006-ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு 12 ஆண்டுகளாகியும், அரசு உயர் பதவிகளில் எஸ்சி/எஸ்டி மக்களின் பிரதிநிதித்துவம் போதிய அளவில் இல்லாதது குறித்து மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 3-ஆம் தேதி கேள்வி எழுப்பியது.
அதே சமயம், 2006-ஆம் ஆண்டு தீர்ப்பை மறுஆய்வு செய்வது குறித்து 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பி வைக்க வேண்டுமா, வேண்டாமா என்பது தொடர்பாக ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி முடிவு எடுக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் முன்வைத்த வாதம்:
எஸ்சி/எஸ்டி பிரிவைச் சேர்ந்த முன்னேறிய வகுப்பினருக்கு க்ரீமி லேயர் திட்டத்தின்படி இடஒதுக்கீடு கூடாது என்று எந்தவொரு தீர்ப்பும் இதுவரை வழங்கப்படவில்லை.
முன்னேறிய பிரிவினருக்கு இடஒதுக்கீடு மறுப்பது குறித்து குடியரசுத்தலைவரும், நாடாளுமன்றமும் மட்டுமே முடிவு செய்ய முடியும். இதில், நீதித்துறை முடிவு செய்ய முடியாது.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் அவர்களது சொந்த ஜாதியில்தான் திருமணம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் பிரிவில் முன்னேறிய நபர்கள் கூட பிற ஜாதியினரை திருமணம் செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.
இந்த மக்களில் சிலர் முன்னேறியிருப்பது உண்மை என்றாலும் கூட, அவர்களது ஜாதிய அடையாளமும், பின்தங்கிய நிலையும் மாறிவிடவில்லை என்றார் வேணுகோபால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




