பெண்களை நாற்காலியாக்கி அவர்கள் மீது அமர்ந்தனரா தேசிய புலனாய்வு அமைப்பினர்?

தில்லி உள்பட வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தவும், முக்கிய அரசியல் தலைவர்களை கொலை செய்யவும் பயங்கரவாதிகள் தீட்டியிருந்த சதித் திட்டத்தை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) முறியடித்து 10 பேரைக் கைது செய்தது செய்தி.
பெண்களை நாற்காலியாக்கி அவர்கள் மீது அமர்ந்தனரா தேசிய புலனாய்வு அமைப்பினர்?
Updated on
3 min read

அம்ரோஹா: தில்லி உள்பட வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தவும், முக்கிய அரசியல் தலைவர்களை கொலை செய்யவும் பயங்கரவாதிகள் தீட்டியிருந்த சதித் திட்டத்தை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) முறியடித்து 10 பேரைக் கைது செய்தது செய்தி.

ஆனால், இன்று அதே தேசிய புலனாய்வு அமைப்பினர் மீது, பயங்கரவாதிகள் என்று கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களின் குடும்பத்தினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் சைத்புர் இம்மாவைச் சேர்ந்த சயீத், ரயீஸ் ஆகியோர் 25 கிலோ வெடிபொருட்களை வைத்திருந்ததாகவும், ராக்கெட் லாஞ்சர்களை வைத்திருந்ததாகவும் கூறி கைது செய்யப்பட்டனர்.

ஆனால், இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்றும், இவர்களைக் கைது செய்தபோது, என்ஐஏ அதிகாரிகள் நடந்து கொண்ட வன்முறை வெறியாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய ரயீஸின் தாய் மஸ்தாரியா அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்த என்ஐஏ அதிகாரிகள் மதியம் 12 மணி வரை இருந்தனர். அனைவரையும் ஒன்றாக பிடித்து வைத்துக் கொண்டனர். யாரையும் பேச அனுமதிக்கவில்லை. எங்களை போர்வையைப் போட்டு மூடிவிட்டனர். சில அதிகாரிகள் எங்கள் மீது அமர்ந்திருந்தனர். கழிவறைக்குச் செல்லவும் அனுமதிக்கவில்லை. நின்றிருந்தபடியே சிறுநீர் கழிக்கும் நிலைக்கு பெண்களை தள்ளினர். குழந்தைகளையும் கூட விட்டுவைக்கவில்லை. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கவும் அனுமதிக்கவில்லை. குழந்தைகள் என்ன செய்துவிடுவார்கள்? பஞ்சாயத்துத் தலைவர்கள் வந்து எங்களை விடுவிக்குமாறு கேட்டும், தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதனை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

கைது செய்யப்பட்ட சகோதரர்களின் தந்தை ஹபீப் கூறுகையில், அவர்கள் தவறு செய்திருந்தால் நிச்சயம் அவர்களை தண்டிக்கலாம். எங்கள் வீட்டிலும் குற்றவாளிகளை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் அவர்கள் குற்றமற்றவர்கள் என்றால் உடனடியாக அவர்களை விடுதலை செய்யுங்கள். என் பிள்ளைகள் பற்றி அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துக் கொள்ளுங்கள். அவைரும் அவர்கள் நிரபராதிகள் என்றே சால்வார்கள் என்கிறார்.

அதே போல, சயீத்தின் வெல்டிங் கடைக்கு வந்த பொதுமக்கள், அவர் செய்து வைத்திருந்த பிஸ்டன்களை செய்தியாளர்களிடம் காண்பித்து, இது டிராக்டர் மற்றும் வாகனங்களுக்காக செய்வது. இதுதான் அவர் வேலையே. ஆனால் இதை ராக்கெட் லாஞ்சர் என்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் கூறுகிறார்கள். சயீத்தைப் பற்றி 10 ஆண்டுகளாகத் தெரியும். அவர் நிரபராதி என்று எல்லோருக்குமே தெரியும் என்கிறார் கிராம இளைஞர் ஒருவர்.

இந்த வெல்டிங் கடையைத் தான் ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தியதாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் குற்றம்சாட்டி சீல் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


சம்பவத்தின் பின்னணி: இராக், சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். அமைப்பின் மீதுள்ள ஈர்ப்பால், இந்தியாவில் புதிய பயங்கரவாத அமைப்பை சிலர் உருவாக்கியிருப்பதாக என்ஐஏ அமைப்புக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 

இதனடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் முகம்மது சோஹைல் (29) என்பவர் சுமார் 4 மாதத்துக்கு முன்பு ஹர்கத்துல் ஹர்ப் இ இஸ்லாம் (இஸ்லாம் மதத்துக்காக போர்) என்ற பெயரில், புதிய பயங்கரவாத அமைப்பை உருவாக்கியது தெரிய வந்தது. வாட்ஸ் அப், டெலிகிராம் ஆகிய சமூகவலைதளங்கள் மூலம் அந்த அமைப்பு பயங்கரவாதிகள் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அந்த பயங்கரவாத அமைப்பினரை என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். பயங்கரவாதிகள் விரைவில் தாக்குதல் நடத்த தயாராகி வருவதை கண்ட என்ஐஏ அமைப்பினர், சுதாரித்துக் கொண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தில்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு, உத்தரப் பிரதேச தீவிரவாத எதிர்ப்புப் படையின் உதவியை கோரினர். பின்னர் தில்லி, உத்தரப் பிரதேச மாநிலம் மீரட், அம்ரோஹா, லக்னௌ ஆகிய பகுதிகளில் உள்ள 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின்போது சோஹைல் உள்பட 16 பேர் பிடிபட்டனர். அவர்களில் 10 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது. எஞ்சிய 6 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர். கைது செய்யப்பட்ட 10 பேரும், அம்ரோஹா, சீலாம்பூர் மற்றும் ஜாப்ரா பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கு எதிராகவும் கிரிமினல் பின்னணி எதுவும் இல்லை. சொந்த நிதியிலேயே செயல்பட்டு வந்துள்ளனர்.

ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யவும், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தவும், பைப் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தவும் தயார் நிலையில் இருந்தனர். பயங்கரவாதிகள் 10 பேரில், ஒருவர் பொறியியல் மாணவர். இன்னொருவர் 3ஆம் ஆண்டு கல்லூரி மாணவர். 2 பேர் வெல்டிங் தொழிலாளிகள்.

குண்டுவெடிப்புகளை எப்படி நிகழ்த்துவது என்பது குறித்து சோஹைல் செயல்முறை பயிற்சி அளிப்பது தொடர்பான விடியோவும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதவிர்த்து, மிகப்பெரிய அளவில் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில், நாட்டு தயாரிப்பு ராக்கெட் லாஞ்சர், கையெறி குண்டுகள், தற்கொலைத் தாக்குதல் நடத்த பயன்படும் ஆடைக்கான பொருள்கள், 12 கைத் துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான துப்பாக்கித் தோட்டாக்கள், 100 செல்லிடப் பேசிகள், 135 சிம்கார்டுகள் ஆகியவையும் அடங்கும்.

ரூ.7.5 லட்சம் ரொக்கம், வெடிகுண்டுகளை இயக்க பயன்படும் 100 அலாரம் கெடிகாரங்கள், வெடிகுண்டுகளை தயாரிக்க பயன்படும் பொட்டாசியம் நைட்ரேட், பெட்டாசியம் கிளோரேட், சல்பர் உள்ளிட்டவை 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

பயங்கரவாதிகள் அனைவரும் தாக்குதல் நடத்த வேண்டிய முக்கிய அரசு அலுவலகங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆகியோரை ஏற்கெனவே நோட்டம் பார்த்துள்ளனர். அவர்களது தயார் நிலையை பார்க்கையில், தற்கொலைத் தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்தது தெரிய வருகிறது. 

வெளிநாட்டில் இருப்போரால் புதிய பயங்கரவாத அமைப்பு வழி நடத்தப்பட்டிருக்கலாம் என்று என்ஐஏ நம்புகிறது. இதுகுறித்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது என்றார் அலோக் மிட்டல்.

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகம், தில்லி காவல்துறை தலைமையகம் ஆகியவை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com