ராஜஸ்தான் இடைத் தேர்தலில் வென்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுலுடன் சந்திப்பு

அண்மையில் ராஜஸ்தானில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் இரு எம்.பி.க்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரை தில்லியில் திங்கள்கிழமை
தில்லியில் திங்கள்கிழமை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த ராஜஸ்தான் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ, எம்.பி.க்கள் மற்றும் அந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள்.
தில்லியில் திங்கள்கிழமை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த ராஜஸ்தான் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ, எம்.பி.க்கள் மற்றும் அந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள்.
Updated on
1 min read

அண்மையில் ராஜஸ்தானில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் இரு எம்.பி.க்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரை தில்லியில் திங்கள்கிழமை சந்தித்து ஆசி பெற்றனர்.
ராஜஸ்தானிலுள்ள அல்வர், அஜ்மீர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கும், மண்டல்கர் பேரவை தொகுதிக்கும் கடந்த மாதம் 29-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் கடந்த 1-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அல்வர், அஜ்மீர் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் கரண் சிங் யாதவ், ராம் ஸ்வரூப் லம்பா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மண்டல்கார் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விவேக் தகாட், 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை தோற்கடித்தார். இத்தொகுதியில் பாஜக எம்எல்ஏவாக இருந்த கிர்தி குமாரி மரணமடைந்ததை தொடர்ந்து, இடைத் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானில் உள்ள அனைத்து 25 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருந்தது. தற்போது இரு தொகுதிகளை காங்கிரஸிடம் இழந்துள்ளது. இதன் மூலம் மக்களவையில் காங்கிரஸின் பலம் 48-ஆக அதிகரித்துள்ளது.
200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப் பேரவையில் பாஜகவுக்கு 161 எம்எல்ஏக்கள் உள்ளனர். அந்த மாநிலத்தில் நிகழாண்டின் இறுதியில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தானில் கிடைத்துள்ள வெற்றி காங்கிரஸுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்நிலையில், புதிய காங்கிரஸ் எம்.பி.க்கள் கரண் சிங் யாதவ், ஸ்வரூப் லம்பா ஆகியோர் மக்களவை உறுப்பினர்களாக திங்கள்கிழமை பதவியேற்றனர். 
தொடர்ந்து அவர்களும், மண்டல்கார் சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வென்ற எம்எல்ஏ விவேக் தகாட்டும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை அவர்களது இல்லத்துக்கு நேரில் சென்று ஆசி பெற்றனர். அப்போது ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com