

'இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய மருத்துவ முறையானது தற்போது பிரபலமாகி வருகிறது. இது மிகவும் திறன் வாய்ந்த மருத்துவ முறை' என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் அருகில் உள்ள சாந்திகிரி ஆசிரமத்தில் வருடாந்திர பூஜிதபீடம் சமர்ப்பணம் மற்றும் கும்பமேளா திருவிழாக்களை அவர் வியாழக்கிழமை தொடங்கிவைத்துப் பேசியது:
நம் நாட்டில் உள்ள பாரம்பரிய மருத்துவ முறைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. மருத்துவர்கள், துறவிகள், சூஃபி ஞானிகள் போன்றவர்களிடம் இருந்து இவை பாரம்பரியாக வந்துள்ளன.
இந்தியா தற்போது உலகின் ஆயுர்வேத மற்றும் யோகாசன மையமாக மாறியுள்ளது. நவீன மருத்துவ வசதிகளோடு புராதன மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, இயற்கை மருத்துவமான நேச்சுரோபதி ஆகியவற்றுக்கும் நரேந்திர மோடி அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
நாட்டு மக்களுக்கு சிறப்பான, குறைந்த செலவிலான மருத்துவச் சேவைகளை அளிக்க அரசு உறுதிபூண்டுள்ளது. மருத்துவச் சேவைகளை சர்வதேசத் தரத்துக்கு அரசு உயர்த்தி வரும் அதே வேளையில், நூற்றாண்டுகள் பழமையான மருத்துவ முறைகளுக்கு அது ஊக்கமளித்தும் வருகிறது.
தொன்மையான மருத்துவ முறைகளை மேம்படுத்தவும் மக்கள் அவை குறித்து விழிப்புணர்வு பெறவும் மோடி அரசு கடந்த 2014-இல் ஆயுஷ் என்ற தனி அமைச்சரகத்தை உருவாக்கியது. ஆயுர்வேதம், யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகியவை தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவதும் இதன் நோக்கமாகும்.
நவீன மருத்துவ முறைகளைப் பின்பற்றுவதோடு, பாரம்பரிய நடைமுறைகளையும் மேம்படுத்துவது நாட்டில் மருத்துவச் சேவைகளுக்கு ஊக்கமளிக்கும். இம்மாதம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய, அரசு நிதி சார்ந்த சுகாதாராக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 10 கோடி ஏழைக் குடும்பங்கள் அல்லது 40 முதல் 50 கோடி பயனாளிகள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
சமூகத்தின் நல்லிணக்கம் மற்றும் சகோதரச் சூழலைச் சிதைக்க விரும்பும் சக்திகளை ஆனிமிக கலாசாரம் மூலம் தோற்கடிக்க நாம் அமைதி, செழுமை, ஒற்றுமை, மத நல்லிணக்கம் ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
திருவனந்தபுரத்துக்கு அருகே நவஜோதிஸ்ரீ கருணாகர குருவால் 50 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட சாந்திகிரி ஆசிரமம் முக்கிய ஆன்மிக மையமாகத் திகழ்கிறது. அதன் பல்வேறு பணிகளில் இந்திய மருத்துவச் சேவைகளுக்கு புத்துயிரூட்டுவதும் ஒன்றாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.