ஊழல், இடைத்தரகர் இல்லாத வீட்டு வசதி: பிரதமர் மோடி உறுதி

ஊழல் மற்றும் இடைத்தரகர் பிரச்னைகளில் இருந்து வீட்டு வசதி துறையை விடுவிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஊழல், இடைத்தரகர் இல்லாத வீட்டு வசதி: பிரதமர் மோடி உறுதி
Updated on
1 min read

ஊழல் மற்றும் இடைத்தரகர் பிரச்னைகளில் இருந்து வீட்டு வசதி துறையை விடுவிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளர்களுடன், காணொளி காட்சி (வீடியோ கான்பரன்சிங்) வாயிலாக நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
அனைவருக்கும் வீட்டு வசதி கிடைக்க வேண்டும் என்ற இலக்குடன் கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
நாட்டின் 75-ஆம் ஆண்டு சுதந்திரன விழா கொண்டாடப்படும் வேளையில், 2022-க்குள் ஒவ்வொரு இந்தியருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளது.
வீட்டு வசதி துறையை ஊழலில் இருந்தும், இடைத்தரகர் பிரச்னையில் இருந்தும் விடுவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம், பயனாளர்கள் எவ்வித தடையுமின்றி தங்களது வீடுகளைப் பெற முடியும்.
புதிய தொழில்நுட்பங்களுடன் வீட்டு வசதி துறை மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், கிராமப்புறங்களிலும், நகரங்களிலும் உள்ள ஏழை மக்களுக்கான வீடுகளை விரைவாக கட்டி முடிக்க முடியும்.
தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகள் கிடைக்க வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
பிரதமர் மந்திரி வீட்டு வசதி திட்டம் என்பது நமது மக்களின் கெளரவத்துடன் சம்பந்தப்பட்டது. அதேவேளையில், தரமான வீடுகளை, விரைவாகக் கட்டி முடிப்பதற்கான திறன்களை வளர்த்தெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் கிராமங்களில் 3 கோடி வீடுகளும், நகரங்களில் ஒரு கோடி வீடுகளும் கட்டி முடிக்கப்படும். நகர்ப்புறங்களில் இதுவரை 47 லட்சம் வீடுகளுக்கு இதுவரை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முந்தைய அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்ததைவிட இது நான்கு மடங்கு அதிகமாகும்.
இதேபோன்று கிராமப்புறங்களில் இதுவரை ஒரு கோடி வீடுகளைக் கட்டுவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முந்தைய அரசின் கடைசி நான்கு ஆண்டுகளில் 25 லட்சம் வீடுகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், வீடு கட்டுவதற்கு தேவையான கால அளவை 18 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக அரசால் குறைக்க முடிந்துள்ளது. அதே சமயம், வீட்டின் அளவையும் 20 சதுர மீட்டர் அளவில் இருந்து 25 சதுர மீட்டராக அதிகரித்துள்ளோம்.
அத்துடன் வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை, முன்பு இருந்த 75,000 ரூபாயில் இருந்து தற்போது ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com