பாகிஸ்தானுடன் விரிவான பேச்சு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

பாகிஸ்தானுடன் மோதல் போக்கைக் கைவிட்டு அந்நாட்டுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
பாகிஸ்தானுடன் விரிவான பேச்சு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
Updated on
1 min read

பாகிஸ்தானுடன் மோதல் போக்கைக் கைவிட்டு அந்நாட்டுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரபூர்வ 'பீப்பிள்ஸ் டெமாக்ரசி' பத்திரிகையில் அவர் எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அனைத்து வழிகளையும் மத்திய அரசு அடைத்து விட்டது. தற்போது அரசு தன்னைத்தானே நெருக்கடிக்கு ஆளாக்கிக் கொண்டுள்ளது. இந்த மோதல் போக்கை அரசு திரும்பப் பெற வேண்டியது மிகவும் அவசியமாகும்.
முதலாவதாக, போர்நிறுத்தத்தை மீண்டும் ஏற்படுத்தவும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ளசர்வதேச எல்லை ஆகியவற்றில் அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விரிவான விவாதம் நடத்துவதற்கு பேச்சுவார்த்தை தொடங்கபட வேண்டும்.
பாகிஸ்தானின் போர்நிறுத்த மீறலுக்கு இந்தியா ராணுவத்தின் துல்லியத் தாக்குதல் மட்டுமே உரிய பதிலடியாக இருக்க முடியும் என்று முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறினார். எனினும், அந்தத் துல்லியத் தாக்குதல்கள் மூலம், பாகிஸ்தான் ராணுவம்தொடர்ந்து நடத்தும் குண்டு வீச்சையும், எல்லைக்கு அப்பாலிருந்து ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்களையும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
போர்நிறுத்தம் அமலுக்கு வந்த கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து கவனித்துப் பார்த்தால், கடந்த ஆண்டில்தான் (2017) அதிக அளவிலான போர்நிறுத்த மீறல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது தெரிய வரும். அவ்வாறு, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் 860 சம்பவங்களும், சர்வதேச எல்லையில் 120 சம்பவங்களும் நடைபெற்றன. கடந்த மூன்று மாதங்களில் நிலைமை மேலும் மோசமடைந்து விட்டது. இந்த ஆண்டின் (2018) முதல் இரண்டு மாதங்களில் மட்டும் 400 போர் நிறுத்த மீறல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
காஷ்மீரில் நடக்கும் அனைத்துப் போராட்டங்களும் பிரிவினைவாதக் கோரிக்கைகளும் பாகிஸ்தானால் தூண்டப்படுபவை என்ற ஒரே கோணத்திலேயே மோடி அரசு பார்க்கிறது. அந்தப் பார்வைதான் ஜம்மு-காஷ்மீருக்குள் அரசியல்ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்க விடாமல் அரசைத் தடுக்கிறது. பாஜக அரசின் பாதுகாப்பு மற்றும் ராணுவம் சார்ந்த அணுகுமுறையானது காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலைமையை மோசமாக்கி விட்டது என்று பிரகாஷ் காரத் அதில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com