குடும்பத்துக்கு 2 குழந்தைகளை மட்டுமே பெற்று கொள்ள வேண்டும் என்ற விதியை அமல்படுத்தக்கோரி தொடுக்கப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலரும், ஜீவன் பச்சௌ அன்டோலன் தன்னார்வ தொண்டு அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அனுபம் வாஜ்பாய் மனு தொடுத்திருந்தார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகிறது; 1,000 உயிரினங்களும், 20,000 வகையிலான பூச் செடிகளும் அழியும் அபாயத்தில் இருக்கின்றன. இதேபோல், மனிதர்கள் வாழ்வதற்கு வீடுகள் தொடர்ந்து கட்டப்படுவதால், விவசாய நிலம் அழியத் தொடங்குகிறது. எனவே இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு, குடும்பத்துக்கு அதிகபட்சம் 2 குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதியை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இதில் இருந்து விலகும் நபர்கள், அரசு ஊழியர்களாக இருந்தால், அவர்களது பதவியை பறிக்க வேண்டும். பிற குடிமக்களுக்கு அளிக்கும் சலுகைகளை அவர்களுக்கு அளிக்கக் கூடாது என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க இயலாது என்று தெரிவித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகளை மனுதாரர் அணுகி தீர்வு பெற வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










