உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் பதுங்கியிருந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியை அந்த மாநில தீவிரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதன்மூலம், விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் தாக்குதல் நடத்தும் அவரது சதித் திட்டத்தை அவர்கள் முறியடித்துள்ளனர்.
இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில காவல்துறை தலைவர் ஓ.பி. சிங் கூறியதாவது:
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த குவாமர் உஜ் ஜாமா என்ற ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி, சமூகவலைதளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் நிற்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த படம், சமூககவலைதளத்தில் வேகமாக பரவியது.
இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு, கான்பூர் காவல்துறை அதிகாரிகள் ஆகியோருடன் சேர்ந்து உத்தரப் பிரதேச தீவிரவாத எதிர்ப்புப் படையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கான்பூரில் குவாமர் உஜ் ஜாமா பதுங்கியிருப்பது, அவரது செல்லிடப் பேசி எண்ணின் செயல்பாட்டை வைத்து கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 10 நாள்களாக குவாமர் உஜ் ஜாமாவை உத்தரப் பிரதேச தீவிரவாத எதிர்ப்புப் படையினர் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், கான்பூரின் சாகேரி பகுதியில் பதுங்கியிருந்த குவாமர் உஜ் ஜாமாவை உத்தரப் பிரதேச தீவிரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனர். விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் பயங்கரவாத தாக்குதலை நடத்துவதற்கு அவர் சதித் திட்டம் தீட்டியிருந்தார். இந்த கைது நடவடிக்கையின் மூலம், அந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது.
குவாமர் உஜ் ஜாமா, பாகிஸ்தானுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு சென்று பயங்கரவாத பயிற்சி பெற்றார். பின்னர் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தார். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையிலும் வெளிநாட்டுக்கு சென்று விட்டார்.
பி.ஏ. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறாத போதிலும், கணினியை அவருக்கு நன்கு கையாளத் தெரியும். குவாமல் உஜ் ஜாமாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்லிடப் பேசியில், கான்பூரில் இருக்கும் கோயில் விடியோ காட்சிகள் உள்ளன. அங்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாரா? வேறு பயங்கரவாதிகளுடன் அவருக்கு தொடர்புள்ளதா? அவருக்கு எங்கிருந்து நிதி வருகிறது? கான்பூரில் எதற்கு அவர் பதுங்கியிருந்தார்? என்பது குறித்து உத்தரப் பிரதேச தீவிரவாத எதிர்ப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றார் ஓ.பி. சிங்.
உத்தரப் பிரதேச மாநில தீவிரவாத எதிர்ப்பு படையினரால் கடந்த மார்ச் மாதம் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அதையடுத்து ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







