அயோத்தி வழக்கை 3 நீதிபதிகள் அமர்வே விசாரிக்கும்
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோருவது தொடர்பான வழக்கில், மசூதி இஸ்லாம் மதத்தின் ஓர் அங்கம் அல்ல என்று ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை


அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோருவது தொடர்பான வழக்கில், மசூதி இஸ்லாம் மதத்தின் ஓர் அங்கம் அல்ல என்று ஏற்கெனவே வழங்கப்பட்ட தீர்ப்பை 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்த வழக்கை, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வே விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அயோத்தி பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமஜென்ம பூமி எனக் கூறப்படும் சர்ச்சைக்குரிய பகுதி எவருக்குச் சொந்தம் என்ற பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
கடந்த 1950-ஆம் ஆண்டில் ஹிந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த கோபால் சிங் என்பவர் அயோத்தி நிலத்துக்கு உரிமை கோரி முதன்முதலாக மனுதாக்கல் செய்தார். அதேபோன்று இஸ்லாமிய அமைப்பு சார்பில் சித்திக் என்பவரும் மனு தாக்கல் செய்தார். மனுதாரர்கள் இருவருமே இறந்துவிட்ட நிலையிலும், அதுதொடர்பான வழக்கு இன்னமும் நிலுவையில் இருந்து வருகிறது.
இதனிடையே, ராமஜென்ம பூமி தொடர்பாக, எம்.இஸ்மாயில் ஃபரூக்கி என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு, கடந்த 1994-ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிரான தீர்ப்பை வழங்கியது. அதில், மசூதிகள் இஸ்லாம் மதத்தின் ஓர் அங்கம் கிடையாது. முஸ்லிம்கள் எந்த இடத்தில் இருந்தும் தொழுகை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோருவது தொடர்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் உயர் நீதிமன்றம், கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதில், 2.77 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த இடத்தை மனுதாரர்களான ஸன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய அமைப்புகள், சம பாகங்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதனிடையே, உச்ச நீதிமன்றம் கடந்த 1994-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி, மறு விசாரணை நடத்த வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ். அப்துல் நஸீர் ஆகியோரைக் கொண்ட 3 நீதிபதிகள் அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சார்பிலும், தன்னுடைய சார்பிலும் நீதிபதி அசோக் பூஷண் தீர்ப்பை வாசித்தார். அதன் விவரம்:
அனைத்து மசூதிகளும், அனைத்து தேவாலயங்களும், கோயில்களும் சம்பந்தப்பட்ட சமூகத்தினருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. அனைத்து மதங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும். எந்த அடிப்படையில் 1994-ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது என்பதை ஆராய வேண்டியுள்ளது. கடந்த 1994-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பு, இந்த வழக்குக்கு தொடர்பில்லாமல் உள்ளது. இந்த வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்படும். எனவே, இந்த வழக்கை 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு மாற்ற முடியாது என்று நீதிபதி அசோக் பூஷண் குறிப்பிட்டார்.
ஆர்.எஸ்.எஸ்., முஸ்லிம் அமைப்பு வரவேற்பு
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வரவேற்றுள்ளன.
இதுதொடர்பாக, ஆர்எஸ்எஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ராமஜென்ம பூமி வழக்கை, 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வே, அக்டோபர் 29-ஆம் தேதி முதல் விசாரிப்பதற்கு முடிவு செய்திருப்பது வரவேற்புக்குரியது. முதன்மை வழக்கில் விரைவில் தீர்ப்பளிக்கப்படும் என நம்புகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறியுள்ளது. அந்த அமைப்பின் உறுப்பினர் ஜாஃபர்யாப் ஜிலானி கூறுகையில், அயோத்தி வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது. மேலும், நம்பிக்கையின் அடிப்படையில் வழக்கு விசாரணை நடைபெறாது என்பதையும் வியாழக்கிழமை அளித்த தீர்ப்பு தெரிவிக்கிறது என்றார்.
காங்கிரஸ் கருத்து
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்கு அனைத்து தரப்பினரும் கட்டுப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
மாறுபட்ட தீர்ப்பு
நீதிபதி எஸ். அப்துல் நஸீர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தார். அதாவது, மசூதிகள், இஸ்லாமின் ஓர் அங்கமா என்பதை மத நம்பிக்கையின் அடிப்படையில் முடிவு செய்யாமல், விரிவாக விவாதித்து முடிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, இந்த வழக்கை 5 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி விசாரிப்பதுதான் சரியாக இருக்கும் என்றார் அவர்.
எனினும், பெரும்பான்மை நீதிபதிகள், 5 நீதிபதிகள்அமர்வுக்கு மாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதையடுத்து, நில உரிமை தொடர்பான முதன்மை வழக்கில் விரைவில் தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக். 29 முதல் விசாரணை
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வரும் அக்டோபர் 2-ஆம் தேதி ஓய்வுபெறுவதால், புதிதாக அமைக்கப்படும் 3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வே, முதன்மை வழக்கை வரும் அக்டோபர் 29-ஆம் தேதி முதல் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...