
ஒரு பெண்ணின் மதிப்பு 71 செம்மறி ஆடுகள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமணமான பெண் ஒருவர், தனது காதலருடன் வாழ ஆசைப்படவே, காதலர், தனது காதலியின் கணவருக்கு 71 செம்மறி ஆடுகளை இழப்பீடாகக் கொடுக்க முன்வந்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு சமீபத்தில் திருமணம் ஆனது. இந்த சூழ்நிலையில், தனது காதலருடன் சேர வேண்டும் என்று வீட்டை விட்டு வெளியேறி, காதலரது வீட்டில் தஞ்சம் புகுந்தார். சில நாட்கள் பெண்ணின் கணவருக்கும், காதலருக்கும் தொடர்ந்து சண்டை வந்தது.
பின்னர், இந்த விவகாரம் ஊர் பஞ்சாயத்தின் முன் விசாரணைக்கு வந்தது. அந்தப் பெண், காதலருடன் வாழ வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். இறுதியில் பஞ்சாயத்து ஒரு முடிவுக்கு வந்தது. காதலருடன் அந்தப் பெண் இருக்க வேண்டும் என்றால், காதலர் அந்த பெண்ணின் கணவருக்கு 71 செம்மறி ஆடுகளை இழப்பீடாக கொடுக்க வேண்டும் என பஞ்சாயத்து உத்தரவிட்டது. பஞ்சாயத்தின் இந்த முடிவுக்கு மூவருமே ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், இந்தப் பிரச்னை இத்துடன் முடிவுக்கு வரவில்லை.
காதலரின் தந்தை இதற்கு வில்லங்கமாக வந்தார். பஞ்சாயத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இழப்பீடாக தாங்கள் வைத்திருக்கும் செம்மறி ஆடுகளை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும், காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கவே, காவல்துறை இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.