
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் என்.ஆர்.எஸ். அரசு மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார். இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கு பணியாற்றி வரும் இரண்டு பயிற்சி டாக்டர்களை தாக்கினர். இதை கண்டித்து 11-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தை கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களுக்கு ஆதரவாகவும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் கடந்த 14-ந் தேதி முதல் 3 நாட்கள் போராட்டங்கள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் திங்களன்று வேலைநிறுத்தம் நடத்தவும் இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி இன்று டாக்டர்களின் வேலைநிறுத்தம் நாடு முழுவதும் நடைபெற்றது.
இதனால் நாடு முழுவதும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆனால் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சைகள் எந்த பாதிப்பும் இல்லாமல் வழக்கம் போல நடைபெறுகின்றன.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களை பேச்சுவார்த்தைக்கு வரும்படி மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஞாயிறன்று அழைப்பு விடுத்திருந்தார். இதைதொடர்ந்து, திங்களன்று தலைமை செயலகத்தில் டாக்டர்களுடன் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் முடிவில் மருத்துவர்களது முக்கிய கோரிக்கைகளை மம்தா ஏற்றுக்கொண்டதால், மேற்கு வங்கத்தில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.