கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நீரவ் மோடி சகோதரருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,400 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை

News image
Updated On :13 செப்டம்பர் 2019, 7:58 pm

DIN


பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,400 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை இன்டர்போல் (சர்வதேச காவல்துறை) பிறப்பித்துள்ளது.
நேஹல் மோடி மீதான கருப்புப் பண மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது. நேஹல் மோடி (40), பெல்ஜியம் நாட்டில் பிறந்தவர்; அவர் ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகள் தெரிந்தவர் என்று ரெட் கார்னர் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
தலைமறைமறைவாக உள்ள நேஹல் மோடி, தங்களது நாட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தால், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று உறுப்பு நாடுகளுக்கு இன்டர்போல் அறிவுறுத்தியுள்ளது. இன்டர்போல் அமைப்பில் 192 உறுப்பு நாடுகள் உள்ளன. 
முன்னதாக, வங்கிக் கடன் மோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் நேஹல் மோடியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அதில், நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸியின் முதலீட்டு ஆலோசகராக நேஹல் மோடி செயல்பட்டுள்ளார். அவர்களது சட்டவிரோத செயல்கள் அனைத்துக்கும் உதவியாக இருந்துள்ளார். வங்கிக் கடன் மோசடி வெளியானதும் ஹாங்காங் மற்றும் துபையிலிருந்து விலைமதிப்புமிக்க வைரங்கள், முத்துகள், நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை, நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் பன்சாலியுடன் இணைந்து வேறெங்கோ எடுத்துச் சென்றுவிட்டார். செல்லிடப்பேசி தகவல்கள் உள்பட மின்னணு ஆதாரங்களையும் நேஹல் மோடி அழித்துவிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது. வங்கிக்கடன் மோசடிக்கு பிறகு, நீரவ் மோடி வெளிநாட்டில் தஞ்சமடைவதற்கும் அவர் உதவினார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, நேஹல் மோடிக்கு எதிராக பிணையில் வெளிவர இயலாத பிடியாணையை மும்பை நீதிமன்றம் பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை பிறப்பிக்குமாறு, இன்டர்போலிடம் அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்தது. ஏற்கெனவே, நீரவ் மோடி, அவரது சகோதரி பூர்வி மோடி, பன்சாலி ஆகியோருக்கு எதிராகவும் ரெட் கார்னர் நோட்டீஸை இன்டர்போல் பிறப்பித்திருந்தது.
வழக்கு விவரம்: பல நாடுகளில் வைர உற்பத்தி நிறுவனங்கள், வைர விற்பனைக் கடைகளை நடத்தி வந்த நீரவ் மோடி,  அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக கடன் உத்தரவாதக் கடிதங்களைப் பெற்று, அவற்றை வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிக் கிளைகளிடம் கொடுத்து சுமார் ரூ.13,400 கோடி வரை கடன் பெற்றிருந்தனர். இந்த உத்தரவாதக் கடிதங்களை வழங்கியதற்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் உள்ள பதிவேடுகளில் எந்த அலுவலகக் குறிப்பும் இல்லை. மேலும், அங்குள்ள கணினி சேமிப்பு மையத்திலும் அந்த விவரங்கள் இடம்பெறவில்லை என்பது பின்னர் கண்டறியப்பட்டது.
இந்த மோசடி கடந்த ஆண்டு பிப்ரவரியில் அம்பலமானது. ஆனால், அதற்கு முன்னரே நீரவ் மோடி, சோக்ஸி உள்ளிட்டோர் இந்தியாவிலிருந்து தப்பிவிட்டனர்.
இதனிடையே, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை வழக்குப் பதிவு செய்தன. பிரிட்டனுக்கு தப்பிய நீரவ் மோடியையும், ஆன்டிகுவாவில் தஞ்சமடைந்த மெஹுல் சோக்ஸியையும் இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
பிரிட்டனில் நாடுகடத்தல் வழக்கை எதிர்கொண்டுள்ள நீரவ் மோடி, தற்போது லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.