சுடச்சுட

  

  வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன்: ஃபரூக் அப்துல்லா

  By DIN  |   Published on : 07th August 2019 04:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  farook-abdula


  ஜம்மு-காஷ்மீரில் தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சர்வாதிகாரப் போக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.


  ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல்சாசன சட்டத்தின் 370-ஆவது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியுள்ளது. அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஸ்ரீநகரில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  ஜம்மு-காஷ்மீருக்குள் நுழையவோ, இங்கிருந்து வெளியேறவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன். ஒமர் அப்துல்லாவும், மெஹபூபாவும் கைது செய்யப்பட்ட செய்தியை ஊடகங்கள் மூலமே தெரிந்துகொண்டேன். 
  நாங்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். வன்முறையை நாங்கள் என்றும் விரும்பியதில்லை. மகாத்மா காந்தியின் அகிம்சை வழியிலேயே பயணித்து வருகிறோம். எங்களை ஏன் இவ்வாறு நடத்த வேண்டும்?
  பொய் கூறுகிறார்: இந்நிலையில், நான் சுதந்திரமாக நடமாடுவதாகவும், என்னுடைய சுயவிருப்பத்தின்படியே எனது வீட்டில் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாகக் கேள்விப்பட்டேன். எனது வீட்டு வாசலில் காவல் துறை உயரதிகாரி ஒருவர் எந்நேரமும் உள்ளார். எனது வீட்டுக்கு உள்ளே வரவும், வீட்டிலிருந்து வெளியே செல்லவும் எவரும் அனுமதிக்கப்படவில்லை. இந்தச் சூழலில், நான் சுதந்திரமாக உள்ளதாக அவரால் (அமித் ஷாவால்) எப்படி பொய் கூற முடிகிறது?
  வீட்டுக் கதவை உடைத்து வந்தே, உங்களிடம் (செய்தியாளர்களிடம்) பேசிக் கொண்டிருக்கிறேன் என்றார் ஃபரூக் அப்துல்லா.

  சுயவிருப்பத்தின்படி, வீட்டிலேயே உள்ளார்
  முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
  இது தொடர்பாக, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, மக்களவையில் ஃபரூக் அப்துல்லா எனக்கு அருகில்தான் அமர்ந்திருப்பார். ஆனால், அவர் இன்று அவைக்கு வரவில்லை. அவரது குரல் இங்கே ஒலிக்கவில்லை. அவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? என்று கேள்வி எழுப்பினார். 
  இதற்கு பதிலளித்த அமித் ஷா, ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவும் இல்லை; வீட்டுக் காவலில் வைக்கப்படவும் இல்லை. அவருடைய சுயவிருப்பத்தின்படி, அவரது வீட்டிலேயே உள்ளார் என்றார். இதையடுத்து, அவரது உடல்நலம் சரியில்லையா? என்று சுப்ரியா சுலே கேள்வி எழுப்பினார்.
  இதற்கு, அதை மருத்துவர்கள்தான் தெரிவிக்க வேண்டும். நான் அவருக்கு மருத்துவம் பார்க்க இயலாது என்று பதிலளித்தார் அமித் ஷா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai