/

"மின்னணுக் கோப்புகள் எப்படி தீயில் அழியும்?" : கேரள நிதியமைச்சர் எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி

மின்னணு கோப்புகளாக உள்ளவை எப்படி தீ விபத்தில் எரியும் என கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் எதிர்க்கட்சிகளுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :27 ஆகஸ்ட் 2020, 11:03 am

DIN

மின்னணு கோப்புகளாக உள்ளவை எப்படி தீ விபத்தில் எரியும் என கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் எதிர்க்கட்சிகளுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரளத்தில் தற்போது முக்கிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது தங்கக்கடத்தல் வழக்கு. மாநில முதன்மை செயலர் இந்த வழக்கில் தொடர்புடையவர் என குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில் முதல்வர் பினராய் விஜயன் மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில் கேரளத் தலைமைச்செயலகத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. தங்கக் கடத்தல் கோப்புகளை அழிக்க திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநில அரசைக் கண்டித்து தலைமைச் செயலகம் முன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தனது சுட்டுரையில் பதிலளித்துள்ளார். அதில் "தீ விபத்தில் ஜிமெயில் இறந்து விட்டது. யாஹூ படுகாயமடைந்துள்ளது. அதனால் எதிர்க்கட்சிகள் போராடுகின்றன. எத்தனை மின்னணுக் கோப்புகள் தீ விபத்தில் எரிக்கப்பட்டன?" என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான தோல்வியால் காங்கிரஸ் மற்றும் பிஜேபி மிகவும் வருத்தத்தில் உள்ளன. இதனால் அவர்கள் அனைத்து கரோனா நெறிமுறைகளையும் மதிக்காமல் வன்முறைப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த திங்கள்கிழமை ஆளும் இடது முன்னணி அரசு மீது காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.