‘விவசாயிகளை தேசவிரோதி என அழைக்க நீங்கள் யார்?’: சுக்பீர் பாதல் கண்டனம்

விவசாயிகளை தேசவிரோதிகள் என அழைப்பவர்களே உண்மையில் தேசத்திற்கு விரோதமாக செயல்படுகின்றனர் என பாஜகவின் கூட்டணியில் இருந்து வெளிவந்த சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் பாதல் தெரிவித்துள்ளார்.
சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் பாதல்
சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் பாதல்

விவசாயிகளை தேசவிரோதிகள் என அழைப்பவர்களே உண்மையில் தேசத்திற்கு விரோதமாக செயல்படுகின்றனர் என பாஜகவின் கூட்டணியில் இருந்து வெளிவந்த சிரோமணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பீர் பாதல் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லியில் கடந்த 8 நாள்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள விவசாயிகள் போரட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவளித்து வருகின்றனர்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் பாதல் விவசாயிகளை விமர்சிப்பவர்களைக் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது கருத்தைத் தெரிவித்த அவர்,“ நாட்டில் உள்ளவர்களை தேச விரோதி என அறிவிக்க பாஜகவுக்கோ அல்லது வேறு யாருக்கோ உரிமை உள்ளதா? இந்த மக்கள் (விவசாயிகள்) தங்கள் முழு வாழ்க்கையையும் தேசத்திற்காக அர்ப்பணித்துள்ளனர்” எனக் கூறினார்.

மேலும், “நீங்கள் அவர்களை தேச விரோதிகள் என்று அழைக்கிறீர்கள். அவர்களை தேசவிரோதிகள் என்று அழைக்கும் நீங்கள் தான் உண்மையில் தேச விரோதிகள்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து “விவசாயிகள் போராட்டங்களில் வயதான பெண்கள் உள்ளனர். அவர்கள் காலிஸ்தானியர்களைப் போலத் தெரிகிறார்களா?. இது விவசாயிகளுக்கு அவமானம் தருவதாகும். எங்கள் விவசாயிகளை தேச விரோதிகள் என்று அழைப்பதற்கு எவ்வளவு தைரியம்?” என கண்டனம் தெரிவித்தார்.

முன்னதாக சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுக்தேவ் சிங் திண்ட்சா வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்மபூஷண் விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com