மும்பை: நாடு மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதை எடுத்துக்காட்டும் விதமாக பெருநிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி மூன்றாவது காலாண்டில் ரூ.1.09 லட்சம் கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரிய (சிபிடிடி) தகவல்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
கரோனாவால் கடும் பாதிப்புக்கு உள்ளான இந்தியப் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் வேகமெடுத்து வருவதை எடுத்துக்காட்டும் வகையிலும், நிறுவனங்களுக்கான வரி விகிதம் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக 25 சதவீதமாக குறைக்கப்பட்டதை வரவேற்கும் விதத்திலும் பெருநிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 49 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.1,09,506 கோடியை எட்டியுள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி ரூ.73,126 கோடியாக காணப்பட்டது.
மூன்றாவது காலாண்டில் நாட்டின் மொத்த வரி வசூல் ரூ.7,33,715 கோடியாகவும், நிகர அளவிலான வரி வசூல் ரூ.5,87,605 கோடியாகவும் இருந்தன.
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் கூடுதலாக வரி செலுத்தியோருக்கு ரூ.1,46,109 கோடி மதிப்பிலான தொகை திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வழங்கப்பட்ட ரூ.1,58,988 கோடியுடன் ஒப்பிடுகையில் 8.1 சதவீதம் குறைவாகும்.
நடப்பு நிதியாண்டில் இதுவரையில் பெருநிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரியானது ரூ.2,39,125 கோடியாக உள்ளது. எனினும், இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் செலுத்திய வரியான ரூ.2,51,382 கோடியுடன் ஒப்பிடுகையில் 4.9 சதவீதம் குறைவாகும்.
தனிநபா் செலுத்திய முன்கூட்டிய வருமான வரி ரூ.32,910 கோடியிலிருந்து 5.6 சதவீதம் குறைந்து ரூ.31,054 கோடியாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ரூ.67,542 கோடியிலிருந்து 10.4 சதவீதம் சரிந்து ரூ.60,491 கோடியானது என சிபிடிடி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.