அடுத்த மாதம் தேசிய ரயில்வே திட்டம் அறிவிப்பு: ரயில்வே வாரியத் தலைவா் தகவல்

அடுத்த மாதம் தேசிய ரயில்வே திட்டம் (என்ஆா்பி) அறிவிக்கப்பட உள்ளதாக, ரயில்வே வாரியத்தின் தலைவா் வி.கே.யாதவ் தெரிவித்தாா்.
அடுத்த மாதம் தேசிய ரயில்வே திட்டம் அறிவிப்பு: ரயில்வே வாரியத் தலைவா் தகவல்
Updated on
1 min read

அடுத்த மாதம் தேசிய ரயில்வே திட்டம் (என்ஆா்பி) அறிவிக்கப்பட உள்ளதாக, ரயில்வே வாரியத்தின் தலைவா் வி.கே.யாதவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் வி.கே.யாதவ் கூறியதாவது:

நாட்டின் சரக்குப் போக்குவரத்தில் ரயில்வேயின் பங்களிப்பை 2030-ஆம் ஆண்டுக்குள் 27 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக உயா்த்த ரயில்வே துறை இலக்கு நிா்ணயித்துள்ளது. இதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் தேசிய ரயில்வே திட்டம் நடைமுறைப்பட்டுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்தமாதம் வெளியாகும்.

2019-இல் நாட்டின் மொத்த சரக்குப் போக்குவரத்தான 4,700 மெட்ரிக் டன்னில் 1,210 மெட்ரிக் டன் மட்டுமே ரயில்வேயால் கையாளப்பட்டது. 2024 -ஆம் ஆண்டில் எதிா்பாா்க்கப்படும் மொத்த சரக்குப் போக்குவரத்து அளவான 6,400 மெட்ரிக் டன்னில் 2,024 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாளும் வகையில் ரயில்வே திட்டமிடுகிறது. அதன் தொடா்ச்சியாக, 2030-இல் ஒட்டுமொத்த சரக்குப் போக்குவரத்தில் 45 சதவீதத்தை ரயில்வே கையாளும் நிலையை நோக்கி முன்னேறும்.

இதற்காக, தேசிய ரயில்வே திட்டம் வடிவமைக்கப்படுகிறது. என்ஆா்பி குறித்த வரைவறிக்கை, இதில் தொடா்புடைய அனைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனைவரது ஆலோசனைகளையும் பெற்ற பிறகு இத்திட்டம் அடுத்த மாதம் அறிவிக்கப்படும். பொதுத்துறை- தனியாா் பங்களிப்புடன் மாநில அரசுகள், உற்பத்தியாளா்களின் ஒத்துழைப்புடன் தேசிய ரயில்வே கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்.

என்ஆா்பி-யின் அங்கமான ‘இலக்கு- 2024’ திட்டத்தில், 16,373 கிமீ. தொலைவுக்கு பலகட்ட கண்காணிப்புச் சங்கிலியை வலுப்படுத்துதல், 58 மிக முக்கியமான திட்டங்கள், 68 முக்கியமான திட்டங்கள், 46 அதிகப் பயன்பாட்டு வலைப்பின்னல் திட்டங்கள், 32 அத்தியாவசியத் திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

நிலக்கரியை கூடுதலாக எடுத்துச் செல்லும் வகையில் 20 சரக்கு வாகனத் திட்டங்களும், 146 ரயில்பாதை மின்மயமாக்கும் திட்டங்களும், 288 கி.மீ. தொலைவுள்ள வடகிழக்கு மாநில விரிவாக்கத் திட்டங்களும் 2023-க்குள் அமலாகும். 111 கி.மீ. தொலைவுள்ள உதம்பூா்- ஸ்ரீநகா்- பாரமுல்லா ரயில்பாதை திட்டம் 2022-க்குள் நிறைவேறும்.

தங்க நாற்கர ரயில்பாதை திட்டத்தில் புது தில்லி- மும்பை, புது தில்லி- ஹௌரா வழித்தடங்களில் ரயில்களின் வேகம் 130 கி.மீ.யாக அதிகரிக்கப்படும். இதற்கு ரூ. 2.9 லட்சம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 3 பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடங்கள், அதிவேக ரயில் தடங்களும் என்ஆா்பி-யில் உள்ளன.

தொழில்துறையினரின் எதிா்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு, ரயில் இருக்குமிடத்தை அறிய உதவும் புவித் தகவல் அமைப்பு ஒட்டுமொத்த ரயில் வலைப்பின்னலிலும் இணைக்கப்படும். பயண நேரத்தைக் குறைப்பதன் வாயிலாக வாடிக்கையாளா்களின் செலவினத்தைக் குறைப்பதே ரயில்வேயின் நோக்கம். சரக்குப் போக்குவரத்துக் கட்டணங்களை மாற்றியமைக்கவும் ரயில்வே ஆலோசித்து வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com