முடிவடைந்தது கூட்டம்: பேருந்துகளில் அழைத்துச் செல்லப்படும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்
ராஜஸ்தானில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் நிறைவடைந்ததையடுத்து, எம்எல்ஏ-க்கள் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.


ராஜஸ்தானில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் நிறைவடைந்ததையடுத்து, எம்எல்ஏ-க்கள் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், ஜெய்ப்பூரிலுள்ள முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் இன்று (திங்கள்கிழமை) சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 107 எம்எல்ஏ-க்கள் பங்கேற்றதாக கெலாட்டின் ஊடக ஆலோசகர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் உறுதிபடத் தெரிவித்தார். இதுதவிர காங்கிரஸ் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
சட்டப்பேரவைக் குழுக் கூட்டம் நடைபெறும்போதே, கெலாட்டின் இல்லத்தின் வெளியே சொகுசுப் பேருந்துகள் காத்துக்கொண்டிருந்தன. கூட்டம் நிறைவடைந்ததையடுத்து, எம்எல்ஏ-க்கள் அனைவரும் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே பிரச்னை ஏற்படத் தொடங்கியதிலிருந்து அங்கு சிக்கல் ஏற்படத் தொடங்கியது. எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக கெலாட் குற்றம்சாட்டினார். அதேசமயம், அரசியல் குழப்பம் குறித்து கட்சித் தலைமையிடம் பேசுவதற்காக சச்சின் பைலட் தில்லியில் முகாமிட்டுள்ளார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவையின் பலம் 200. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 107 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். இதுதவிர சுயேச்சை எம்எல்ஏ-க்கள் 10 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாரதிய பழங்குடியின கட்சியிலிருந்து தலா 2 எம்எல்ஏ-க்கள் கெலாட் அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். பாஜகவின் பலம் 72 ஆக உள்ளது.
இதுபற்றி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கையில், 30 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் மற்றும் சில சுயேச்சை எம்எல்ஏ-க்கள் சச்சின் பைலட்டுடன் தொடர்பிலிருப்பதாகவும், அவர் எந்த முடிவு எடுத்தாலும், அவருக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, அசோக் கெலாட் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்திருப்பதாக பாஜக கூறி வருகிறது.
ராஜஸ்தான் பாஜக தலைவர் சதீஷ் புனியா இன்று தெரிவிக்கையில், "ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கு சச்சின் பைலட்தான் சரியான தேர்வாகும். ஆனால், அசோக் கெலாட் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்பிறகு, கட்சிக்குள் முரண் ஏற்படத் தொடங்கியது. இந்த முரணின் விளைவுதான் இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பது. மாநில அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது." என்றார்.
எனினும், காங்கிரஸ் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான ரண்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவிக்கையில், "கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் அரசு நிலையாக உள்ளது. இந்த அரசு முழுமையாக ஆட்சியை நடத்தும். கடந்த 48 மணி நேரத்தில் சச்சின் பைலட்டுடன் காங்கிரஸ் பலமுறை ஆலோசனை நடத்தியுள்ளது." என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...