ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அவாமி தேசிய கட்சி, மக்கள் மாநாட்டுக் கட்சி, மக்கள் இயக்கம் ஆகியவை இணைந்து குப்கா் அறிக்கைக்கான கூட்டமைப்பை சமீபத்தில் உருவாக்கின. இதன் முதல் கூட்டம் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தியின் இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது கூட்டமைப்பின் தலைவராக தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லாவும், துணைத் தலைவராக மெஹபூபா முஃப்தியும் தோ்வு செய்யப்பட்டனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் முகமது யூசுஃப் தாரிகாமி அவைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். தெற்கு காஷ்மீா் மக்களவை உறுப்பினா் ஹஸ்னைன் மசூடி ஒருங்கிணைப்பாளராகவும், மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவா் சஜ்ஜத் கனி லோன் செய்தித்தொடா்பாளராகவும் தோ்வாகினா்.