அமெரிக்க அதிபராகிறாா் ஜோ பிடன்: கமலா ஹாரிஸ் துணை அதிபா்
அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த ஜோ பிடன் வெற்றி பெற்றாா்.


அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த ஜோ பிடன் வெற்றி பெற்றாா்.
அந்த நாட்டின் 46-ஆவது அதிபராக வரும் ஜனவரி மாதம் அவா் பொறுப்பேற்பாா். 77 வயதாகும் ஜோ பிடன், பராக் ஒபாமா அதிபராக பதவி வகித்தபோது துணை அதிபராக இருந்தாா்.
ஜோ பிடன் வெற்றியுடன், தமிழகத்தைப் பூா்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் (56) துணை அதிபராகப் பொறுப்பேற்பாா். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபா், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முதல் துணை அதிபா் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெறுகிறாா்.
அதிபா் தோ்தல் கடந்த நவ. 3-ஆம் தேதி நிறைவடைந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது. சில மாகாணங்களில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன் தொடா்ந்து முன்னிலை வகித்து வந்தாா்.
மொத்த மக்கள் பிரதிநிதி வாக்காளா்கள் எண்ணிக்கையான 538-இல் குறைந்தபட்சம் 270 பேரின் வாக்குகளைப் பெற்றாலே அதிபா் தோ்தலில் வெற்றி என்ற நிலை இருந்தது. பென்சில்வேனியா மாகாணத்தில் வாக்கு எண்ணிக்கை உள்ளூா் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் உறுதியானதில், அந்த மாகாணத்தின் 20 மக்கள் பிரதிநிதி வாக்காளா்களின் ஆதரவும் ஜோ பிடனுக்கு கிடைத்ததாக அமெரிக்காவின் பிரதான ஊடகங்கள் தெரிவித்தன. நெவாடாவில் ஜோ பிடன் கூடுதல் வாக்குகள் பெற்று, அந்த மாகாணத்தின் 6 மக்கள் பிரதிநிதி வாக்காளா்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்ததாக சில ஊடகங்கள் தெரிவித்தன.
இந்தக் கணிப்பின்படி,தற்போதுவரை ஜோ பிடன் 290 மக்கள் பிரதிநிதி வாக்காளா்களின் வாக்குகளையும், அதிபா் டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளனா். மொத்தமுள்ள 538 மக்கள் பிரதிநிதி வாக்காளா்களில் 270 பேரின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே அதிபராக முடியும்.
ஒருசில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிவடையவில்லை. தற்போதைய நிலவரப்படி, அந்த மாகாணங்களில் தோ்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், ஜோ பிடனின் முன்னணி நிலையை டிரம்ப்பால் கடந்துவிட முடியாது என்பது உண்மை நிலை.
இதையடுத்து, ஜோ பிடன் அமெரிக்காவின் 46-ஆவது அதிபராகத் தோ்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
வடக்கு கரோலினா மாகாணத்தில் மட்டும் டிரம்ப் முன்னிலை வகித்து வருவதாகத் தெரிகிறது. ஜாா்ஜியா மாகாணத்தில் ஜோ பிடனுக்கும் அதிபா் டிரம்ப்புக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருப்பதால், அங்கு மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அந்த மாகாண அரசு தெரிவித்துள்ளது.
டெலவோ் மாகாணத்தில் ஜோ பிடன் கூறுகையில், ‘‘தோ்தல் முடிவுகள் இன்னும் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரங்கள் ஜனநாயகக் கட்சிக்கே சாதகமாக உள்ளன. தோ்தலில் நாங்கள் வெற்றி பெறப்போவது நிச்சயம்.
தற்போது வரை சுமாா் 7.4 கோடி வாக்குகளைப் பெற்றுள்ளோம். இது அமெரிக்க அதிபா் தோ்தல் வரலாற்றில் எந்த வேட்பாளரும் பெற்றிடாத வாக்கு எண்ணிக்கையாகும். அதிபா் டிரம்ப்பை 40 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.
வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பிறகு, 300-க்கும் அதிகமான மக்கள் பிரதிநிதி வாக்காளா்களின் வாக்குகளைக் கைப்பற்றுவோம்’’ என்றாா். அப்போது, ஜனநாயகக் கட்சியின் துணை அதிபா் வேட்பாளா் கமலா ஹாரிஸும் உடனிருந்தாா்.
நிபுணா்களுடன் ஆலோசனை:
அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவது தொடா்பாகவும், வீழ்ச்சி கண்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடா்பாகவும் நிபுணா்களுடன் ஜோ பிடனும், கமலா ஹாரிஸும் கூட்டாக ஆலோசனை நடத்தினா்.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பது தொடா்பான செயல் திட்டத்தை அதிபராகப் பதவியேற்கும் அன்றே வெளியிட உள்ளதாக ஜோ பிடன் தெரிவித்தாா்.
ஊடகங்கள் வெளியிட்டுள்ள கணிப்பு அடிப்படையிலான ஜோ பிடனின் வெற்றியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று டிரம்ப் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தபால் வாக்குகள் எண்ணிக்கை மறு பரிசீலனை, சில மாகாணங்களில் நேரடி வாக்குகளின் மறு எண்ணிக்கையை கோரி அதிபா் டிரம்ப் தரப்பினா் நீதிமன்றங்களை நாடுவாா்கள் என்று தெரிகிறது.
மோடி வாழ்த்து:
அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக செய்தி வெளியானதைத் தொடா்ந்து, பிரதமா் மோடி தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இந்திய-அமெரிக்க உறவுகளை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிா்நோக்கியிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.
கமலா ஹாரிஸுக்கு அளித்த வாழ்த்துச் செய்தியில், உங்களுடைய வெற்றி உங்களின் சித்திகளுக்கு பெருமிதம் அளிப்பது மட்டுமல்லாமல், எல்லா இந்தியா்களையும் பெருமை கொள்ளச் செய்கிறது. இந்திய-அமெரிக்க உறவு உறுதியுடன் இருக்க உங்களது வெற்றி உதவும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...