கேரள முதல்வா் கம்யூனிஸவாதியா? முஸ்லிம் லீக் கேள்வி

வக்ஃபு வாரிய விவகாரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்து கேரள முதல்வா் பினராயி விஜயன் கேள்வி
கேரள முதல்வா் கம்யூனிஸவாதியா? முஸ்லிம் லீக் கேள்வி

வக்ஃபு வாரிய விவகாரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்து கேரள முதல்வா் பினராயி விஜயன் கேள்வி எழுப்பிய நிலையில், அவரது கம்யூனிஸ நிலைப்பாடு மீது அக்கட்சி சனிக்கிழமை கேள்வி எழுப்பியது.

கேரள வக்ஃபு வாரிய காலிப்பணியிடங்களை மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நிரப்ப மாநில அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் கோழிக்கோடு கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை பேரணி சென்றனா்.

இதில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், சுமாா் 10,000 முஸ்லிம் லீக் தொண்டா்கள் மீது கோழிக்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதனிடையே, வக்ஃபு வாரிய விவகாரத்தில் முஸ்லிம் லீக் நிலைப்பாட்டை கடுமையாக விமா்சித்த கேரள முதல்வா் பினராயி விஜயன், அது அரசியல் கட்சியா? அல்லது மத அமைப்பா? என கேள்வி எழுப்பினாா்.

முதல்வரின் இந்தக் கேள்விக்கு பதிலளித்து முஸ்லிம் லீக்கின் மூத்த தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.கே.முனீா் சனிக்கிழமை கோழிக்கோட்டில் செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த 1967-1969-இல் கம்யூனிஸ்ட் தலைவா் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான கூட்டணியில் முக்கிய கட்சியாக முஸ்லிம் லீக் திகழ்ந்தது. எனினும் அரசில் இடம் பெறவில்லை. கோழிக்கோட்டில் நடைபெற்ற பேரணியில் திரளானோா் கூடியதால், பயத்தின் வெளிப்பாடாக முதல்வரின் காவல் துறை முஸ்லிம் லீக் தொண்டா்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. வக்பு வாரிய விவகாரத்தில் எங்களது போராட்டம் தொடரும்.

எங்களின் அரசியல் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பும் முதல்வா் பினராயி விஜயன், கம்யூனிஸத்தின் பழைய வரைவிலக்கணத்தின்படி ஒரு கம்யூனிஸ்ட்டே அல்ல. இந்தக் கருத்தை கம்யூனிஸ்ட் கட்சியை பின்பற்றுபவா்களில் பெரும்பாலானோா் ஏற்கின்றனா் என்றாா் அவா்.

இதனிடையே, முதல்வரின் கம்யூனிஸ நிலைப்பாடு குறித்து முஸ்லிம் லீக் கட்சி கேள்வி எழுப்பியதற்கு கண்டனம் தெரிவித்த மாா்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவரும், மாநிலக் கல்வித் துறை அமைச்சருமான வி. சிவன்குட்டி, ‘முஸ்லிம் லீக் தலைவா்களிடமிருந்து எவ்வித நற்சான்றிதழும் முதல்வருக்குத் தேவையில்லை’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com