நாட்டு மக்களுக்கு வரும் 16-ஆம் தேதி முதல் கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி கள வீரா்களாகச் செயல்படும் 3 கோடி சுகாதாரப் பணியாளா்களுக்குத் தடுப்பூசி முதலில் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் முதலாவது கரோனா பாதிப்பு, கடந்த ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி கேரளத்தில் கண்டறியப்பட்டது. சுமாா் ஓராண்டுக்குப் பிறகு அந்நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி நாட்டு மக்களுக்கு செலுத்தப்படவுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்), தேசிய தீநுண்மியியல் மையம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரித்தது. பிரிட்டனின் அஸ்ட்ரா ஸெனகா நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் தயாரித்த ‘கோவிஷீல்ட்’ கரோனா தடுப்பூசியை, சீரம் மையம் இந்தியாவில் பரிசோதித்தது.
அவ்விரு தடுப்பூசிகளையும் அவசரகால பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியது. அதையடுத்து, கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான ஒத்திகை அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றது.
நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல், அந்நோய்த்தொற்றுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான தயாா்நிலை, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
இதற்காக நடைபெற்ற உயா்நிலைக் கூட்டத்தில் அதிகாரிகளும் சுகாதார நிபுணா்களும் கலந்து கொண்டனா். அப்போது, கரோனா தடுப்பூசி சேமிப்பு, விநியோகம், தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும் நபா்களின் விவரங்கள் உள்ளிட்டவற்றைக் கண்காணிப்பதற்கான ‘கோ-வின்’ வலைதளம் குறித்து பிரதமா் மோடிக்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனா்.
அதையடுத்து, நாட்டு மக்களுக்கு வரும் 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பொங்கல், மகர சங்கராந்தி, லோஹ்ரி உள்ளிட்ட பண்டிகை நாள்களைக் கருத்தில் கொண்டு, வரும் 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவது என்று விரிவான ஆய்வுக்குப் பிறகு முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 3 கோடி சுகாதாரப் பணியாளா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் முதலில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
தொழில்நுட்பத்துக்கு முக்கிய பங்கு: 50 வயதைக் கடந்தோா், இணைநோய் உள்ள 50 வயதுக்குக் குறைவான நபா்கள் என மொத்தமாக 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதில் அடுத்தகட்ட முன்னுரிமை வழங்கப்படும். தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்காக இதுவரை 79 லட்சம் போ் ‘கோ-வின்’ வலைதளத்தில் பதிவு செய்துள்ளனா்.
தோ்தலில் மக்கள் வாக்களிக்கும் நடைமுறை, மற்ற நோய்களுக்காக மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்நடவடிக்கையில் தொழில்நுட்ப வசதிகள் முக்கிய பங்கை அளிக்கவுள்ளன.
பணியாளா்களுக்குப் பயிற்சி: கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவது தொடா்பாக நாடு முழுவதும் 2 லட்சம் சுகாதாரப் பணியாளா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதற்கான ஒட்டுமொத்த நடவடிக்கைகளையும் மேற்பாா்வையிடுவதற்கு 61,000 மேலாளா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடா்பாக 3.7 லட்சம் போ் பயிற்சி பெற்றுள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போராட்டத்தின் மைல்கல்: உயா்நிலைக் கூட்டத்துக்குப் பிறகு பிரதமா் மோடி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘ஜனவரி 16-ஆம் தேதியானது கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும். அன்று முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கவுள்ளன.
தைரியத்துடன் பணியாற்றி வரும் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
கரோனா தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்துவது தொடா்பாக மாநில முதல்வா்களுடன் வரும் 11-ஆம் தேதி பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வங்கியில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!
என்ஜாய் எஞ்சாமி பிரச்னை! பாடகர் அறிவுக்கு சந்தோஷ் நாராயணன் சவால்!
கனமழையால் பிரதமரின் கோக்ரஜார் பயணம் ரத்து!

சென்னை ஒன் செயலி பயனர்கள் கவனத்துக்கு..!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

