குழந்தையின் சிகிச்சைக்கு 7 நாள்களில் திரண்ட ரூ.18 கோடி; சிகரம் தொட்ட மனிதநேயம்

கேரளத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தையின் மரபணு கோளாறு சிகிச்சைக்கு 7 நாள்களில் ரூ.18 கோடி திரட்டப்பட்டிருப்பதன் மூலம் மனிதநேயம் சிகரத்தைத் தொட்டுள்ளது.
குழந்தையின் சிகிச்சைக்கு 7 நாள்களில் திரண்ட ரூ.18 கோடி; சிகரம் தொட்ட மனிதநேயம்
குழந்தையின் சிகிச்சைக்கு 7 நாள்களில் திரண்ட ரூ.18 கோடி; சிகரம் தொட்ட மனிதநேயம்


கன்னூர்: கேரளத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தையின் மரபணு கோளாறு சிகிச்சைக்கு 7 நாள்களில் ரூ.18 கோடி திரட்டப்பட்டிருப்பதன் மூலம் மனிதநேயம் சிகரத்தைத் தொட்டுள்ளது.

மனிதநேயம் மரித்துப் போய்விட்டதாக நாம் அவ்வப்போது சொல்லிக் கொண்டேயிருந்தாலும் கூட, இதுபோன்ற நேரங்களில் அதை முற்றிலும் மறுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரஃபீக் - மரியும்மா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை மொஹம்மது. முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட இச்சிறுவனுக்கு உலகிலேயே மிக விலை உயர்ந்த மருந்தாகக் கருதப்படும் ஸோல்ஜென்ஸ்மா என்ற ரூ.18 கோடி மதிப்பிலான மருந்தை இறக்குமதி செய்து கொடுக்க பொதுமக்களிடம் நன்கொடை கோரப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியாகி வெறும் 7 நாள்களில் மக்களிடமிருந்து நன்கொடைகள் குவிந்ததைத் தொடர்ந்து, சிகிச்சைக்குத் தேவையான ரூ.18 கோடி திரட்டப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிறுவன் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, ஒரு வாரத்துக்குள்ளேயே அவனது சிகிச்சைக்குத் தேவையான பணம் உலகின் பல நாடுகளிலிருந்தும் குவிந்துள்ளது. ரூ.18 கோடிக்கும் அதிகமான பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதாகவும், இனி யாரும் அதில் பணம் செலுத்த வேண்டாம் என்றும் சிகிச்சைக்கான பணத்தைத் திரட்டத் தொடங்கப்பட்ட அமைப்பு அறிவித்துள்ளது.

குழந்தைக்கு இரண்டு வயது ஆவதற்குள் இருந்த மருந்தை செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியிருந்ததால், அவசரகாலத் தேவையாக இந்தக் கோரிக்கை பெற்றோர் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

குழந்தையின் 15 வயதாகும் மூத்த சகோதரி அப்ராவுக்கும், இதே பாதிப்பு ஏற்பட்டு அவர் சக்கர நாற்காலியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com