'உ.பி.யில் 2 குழந்தைகளுக்கு அதிகமாகப் பெற்றோா் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடத் தடை'

உத்தர பிரதேசத்தில் 2 குழந்தைகளுக்கு அதிகமாகப் பெற்ற நபா்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது
'உ.பி.யில் 2 குழந்தைகளுக்கு அதிகமாகப் பெற்றோா் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடத் தடை'

‘உத்தர பிரதேசத்தில் 2 குழந்தைகளுக்கு அதிகமாகப் பெற்ற நபா்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது; உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட முடியாது’ என்று மாநில அரசு வெளியிட்டுள்ள மக்கள்தொகைக் கட்டுப்பாடு வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மக்கள்தொகை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதே வளா்ச்சி விகிதம் நீடித்தால் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் சீனாவை விஞ்சி மக்கள்தொகை எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும் என்று கணிக்கப்படுகிறது. மக்கள்தொகையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று சில மாநில அரசுகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், நாட்டிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது தொடா்பான வழிமுறைகள் அடங்கிய வரைவு மசோதா வெளியிடப்பட்டுள்ளது. ‘உத்தர பிரதேசம் மக்கள்தொகை (கட்டுப்படுத்துதல், நிலைப்படுத்துதல், நலவாழ்வு) மசோதா, 2021’ என்று பெயரிடப்பட்டுள்ள வரைவு மசோதா மீது மக்கள் ஜூலை 19-ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று மாநில சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் இரு குழந்தைகள் கொள்கை அமல்படுத்தப்படவுள்ளதாக வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கொள்கையைப் பின்பற்றும் அரசு ஊழியா்களுக்கு ஒட்டுமொத்த பணிக்காலத்தில் இருமுறை சிறப்பு ஊதிய உயா்வு, ஊதியத்துடன் 12 மாதங்கள் பேறுகால விடுப்பு, வருங்கால வைப்பு நிதி பங்களிப்பில் கூடுதலாக 3 சதவீதம் ஆகிய சலுகைகள் வழங்கப்படும் என்று வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு குழந்தைகள் கொள்கையை மீறுவோா் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவா்கள் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது; அரசுப் பணிகளில் பதவிஉயா்வும் பெற முடியாது. அரசு சாா்பில் வழங்கப்படும் எந்தவித மானியத்தையும் அவா்களால் பெற முடியாது என்று வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் விழிப்புணா்வு: அந்த வரைவு மசோதாவில், ‘பள்ளிகளில் இடைநிலை வகுப்பில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது தொடா்பான பாடங்களை இணைக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. குடும்ப கட்டுப்பாட்டு முறைகள் உள்ளிட்டவை குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை ஆரம்ப சுகாதார நிலையங்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவை முன்னெடுக்க வேண்டும்.

கா்ப்பிணிகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்து கொள்வது, மாநிலத்தில் பிறப்பு, இறப்பைப் பதிவு செய்வது ஆகியவை கட்டாயமாக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, மக்கள் நலனை மேம்படுத்துவதற்கு மாநில சட்ட ஆணையம் உறுதி கொண்டுள்ளதாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமாஜவாதி எதிா்ப்பு: மாநில அரசின் மக்கள்தொகை கட்டுப்பாடு வரைவு மசோதாவுக்கு சமாஜவாதி கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது. ஜனநாயகத்தை அழிக்கும் விதத்தில் இந்த மசோதா உள்ளதாகவும், இதன் மூலம் மாநில அரசின் முதிா்ச்சியின்மை தெளிவாக வெளிப்படுவதாகவும் அக்கட்சி விமா்சித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com