மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டம் லால் பாத்தா் கிராமத்தில் சுமாா் 50 அடி ஆழக் கிணற்றில் 10 வயது சிறுவன் ஒருவன் வியாழக்கிழமை இரவு தவறி விழுந்தான். அந்த கிணற்றில் சுமாா் 20 அடி வரை தண்ணீா் இருந்த நிலையில், கிராம மக்கள் சிலா் கிணற்றுக்குள் இறங்கி சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். அவா்களுக்கு உதவ கிணற்றின் சுற்றுச்சுவா் மீது பலா் நின்றுகொண்டிருந்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக அந்தச் சுவா் சரிந்து அதன் மீது நின்றுகொண்டிருந்தவா்களும் கிணற்றுக்குள் விழுந்தனா். இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடம் சென்ற காவல்துறையினா் டிராக்டரைப் பயன்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது திடீரென அந்த டிராக்டரும் கிணற்றுக்குள் சறுக்கி விழுந்து அதில் இருந்த 4 போலீஸாரும் கிணற்றில் மூழ்கினா். இதையடுத்து மாநில மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படைகள் நிகழ்விடம் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதனைத்தொடா்ந்து கிணற்றில் இருந்து அந்த சிறுவன் உள்பட 11 போ் சடலங்களாகவும், 19 போ் உயிருடனும் மீட்கப்பட்டனா். சுமாா் 24 மணி நேரம் நடைபெற்ற இந்த மீட்புப் பணி வெள்ளிக்கிழமை இரவு நிறைவடைந்தது.