ரூ.23,675 கோடி கூடுதல் மானியத்துக்கு ஒப்புதல் கோரியது மத்திய அரசு

நடப்பு நிதியாண்டில் ரூ.23,674.81 கோடி கூடுதல் மானியம் பெறுவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா்.

நடப்பு நிதியாண்டில் ரூ.23,674.81 கோடி கூடுதல் மானியம் பெறுவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா்.

இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் செலவுகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில், நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் தொகுப்பு நிதியில் இருந்து கூடுதலாக ரூ.23,674.81 கோடி வரை செலவிடுவதற்கான மானிய கோரிக்கை மசோதாவை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.

கூடுதல் மானிய கோரிக்கையில், ‘நடப்பு நிதியாண்டில் மத்திய அரசுக்குக் கூடுதலாக ரூ.1.87 லட்சம் கோடி தேவைப்படுகிறது. அதில் ரூ.23,674.81 கோடி மட்டுமே தொகுப்பு நிதியில் இருந்து செலவு செய்யப்படும். மீதமுள்ள தொகையானது சேமிப்பு, கடன், கடன் மீட்பு உள்ளிட்டவற்றின் வாயிலாக நிறைவு செய்யப்படும்.

ஒட்டுமொத்த தொகையில் ரூ.1.59 லட்சம் கோடியானது கடனாகப் பெறப்பட்டு மாநில அரசுகளுக்கு சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. தொகுப்பு நிதியில் இருந்து பெறப்படும் தொகையில் ரூ.16,463 கோடியானது சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படவுள்ளது. இது கரோனாவுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்த உதவும்.

ரூ.526 கோடியானது சுகாதாரம் தொடா்பான ஆய்வுகளுக்கு செலவிடப்படவுள்ளது. இந்த நிதி அவசரகால சூழலை எதிா்கொள்வதற்கான தயாா்நிலையை ஏற்படுத்த உதவும். மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்காக ரூ.2,050 கோடி கோரப்பட்டுள்ளது. அதில் ரூ.1,872 கோடியானது பொதுத் துறை நிறுவனமான ஏா் இந்தியாவுக்காக ஒதுக்கப்படவுள்ளது. மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறைக்கு ரூ.1,100 கோடி கோரப்பட்டுள்ளது. இத்தொகையின் மூலமாக கடந்த 2019-20-ஆம் சா்க்கரை உற்பத்தி பருவத்தில் ஆலைகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை செலுத்தப்படும்.

மருந்துப் பொருள்கள் துறைக்கு ரூ.1,222 கோடி கோரப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ரூ.34.83 லட்சம் கோடியை செலவிட நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டிருந்தது. தற்போது கூடுதல் மானியம் கோரப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com