தத்தெடுப்பதில் ஏற்பட்ட மனமாற்றம்: விதிகள் எளிமையாக்கப்படுமா?

குழந்தையில்லாத தம்பதியர், பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது என்பது மிகவும் வரவேற்கத்தக்க விஷயம். 
தத்தெடுப்பதில் ஏற்பட்ட மனமாற்றம்: விதிகள் எளிமையாக்கப்படுமா?
தத்தெடுப்பதில் ஏற்பட்ட மனமாற்றம்: விதிகள் எளிமையாக்கப்படுமா?

குழந்தையில்லாத தம்பதியர், பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது என்பது மிகவும் வரவேற்கத்தக்க விஷயம். 

தம்பதியர் பலரும் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க விரும்பினாலும், அதற்கான சட்டவிதிமுறைகள் கடுமையாக இருப்பதே அவர்களுக்கு மிகப்பெரிய தடைக்கல்லாக உள்ளது. அதனால்தான் பல தம்பதியர் சட்டவிரோதமாக செயல்படும் கும்பல்களிடமிருந்து குழந்தைகளை தத்தெடுக்க முன்வந்து சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

குழந்தைகளை தத்தெடுக்கும் நடைமுறைகளை மத்திய, மாநில அரசுகள் எளிமையாக்கினால், குழந்தை இல்லாத தம்பதியர் மிக விரைவாகவும், உண்மையிலேயே பெற்றோரை இழந்த குழந்தைகளையும் தத்தெடுக்க நல்ல பாலமாக மாறிவிடும். குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதியே சட்டவிதிகள் கடுமையாக இருந்தாலும், அது தத்தெடுப்பு  நடவடிக்கையையே கேள்விக்குறியாக்கிவிடுவதை நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சட்டவிதிகள் கடுமையாக  இருப்பதால்தான் பலரும், தங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலம் குழந்தைகளைத் தத்தெடுக்க முயல்கிறார்கள். அவர்கள் நேராகச் சென்று சிக்குவது குழந்தைகளைக் கடத்தும் கும்பலிடம். இதில் மிகக் கொடுந்துயரம் என்னவென்றால், இவ்வாறு சட்டவிரோதக் கும்பல் என்று தெரியாமல், குழந்தை கடத்தல் கும்பலிடமிருந்து குழந்தைகளை தத்தெடுத்து பாசத்தையும் அன்பையும் கொட்டி வளர்க்கும் தம்பதி, மறைமுகமாக ஒரு குற்றத்துக்குத் தூண்டுகோலாகவும் மாறி விடுகிறார்கள். அந்த குழந்தைக் கடத்தல் கும்பல் காவல்துறையிடம் சிக்கும்போது, இந்த தம்பதியும் சில வேளைகளில் கைதாகிறார்கள். தாங்கள் பிரியத்துடன் வளர்த்தக் குழந்தையையும் பிரிய நேரிடுகிறது.

எனவே, குழந்தை தத்தெடுப்பு முறையை வெளிப்படைத் தன்மையோடு, பதிவு செய்து, குழந்தையில்லாத தம்பதியர் தத்தெடுத்து வளர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால், குழந்தையில்லாத தம்பதிக்கு குழந்தையும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பெற்றோரும் கிடைக்க உறுதுணையாக மாறும்.

சரி குழந்தைகளைத் தத்தெடுப்பதில் மக்களிடையே மிகப்பெரிய அளவில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதை சில புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. பொதுவாக ஆண் குழந்தை பிறந்தால் மிகவும் குதூகலத்துடன் கொண்டாடுவது மக்களின் மனஇயல்பு. 

ஆனால், தத்தெடுக்கும் போது மக்களின் மனநிலை அவ்வாறு இருப்பதில்லை. பொதுவாகவே தத்தெடுக்கும் போது ஆண் குழந்தைகளை விடவும் பெண் குழந்தைகளையே தம்பதி அதிகம் விரும்புகிறார்கள்.

உதாரணமாக பிகார் மாநிலம் முஸாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள தெத்தெடுப்பு சிறப்பு மையத்தில் இரண்டு வயது பாகி குமாரி என்ற சிறுமியை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த குழந்தையில்லாத தம்பதி கடந்த ஜூன் மாதம் தத்தெடுத்துள்ளனர்.  அமெரிக்காவில் வாழும் குழந்தையில்லாத தம்பதி மதுபானிக்கு வந்து, 2 வயது குழந்தை காவியாவை மாவட்ட நீதிபதி முன்னிலையில் தத்தெடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்த விஷயங்களைப் பார்க்கும் போது, தத்தெடுக்கும் போது பெரும்பாலானோர் பெண் குழந்தைகளையே அதிகம் விரும்புவதைக் காட்டுகிறது. இதே நிலைதான் அந்த மாநிலத்தில் செயல்படும் பல தத்தெடுப்பு மையங்களிலும் காணப்படுகிறது.

இது குறித்து சமூக நலன் துறை இயக்குநர் ராஜ் கூறுகையில், தெத்தெடுப்பதில் மக்களின் மனம் பெரிய அளவில் மாறியுள்ளது, பெண் குழந்தைகளையே அதிகம் தத்தெடுக்கிறார்கள் என்கிறார்.

குழந்தை தேவைப்படுவோர், சிஇஆர்ஏ (http://cara.nic.in/)என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, அதன் மூலம் சட்டவிதிகளைப் பின்பற்றி குழந்தைகளை தத்தெடுப்படு அதிகரித்து வருவதாகவும் ராஜ் குமார் கூறுகிறார்.

சமூக நலன் துறையின் புள்ளி விவரப்படி, கடந்த 2018-19ஆம் ஆண்டில் இந்த மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 210 ஆதரவற்றக் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 148 பெண் குழந்தைகளும், 62 ஆண் குழந்தைகளும் அடங்கும். இதுபோல, 2019-20ஆம் ஆண்டில் 82 பெண் குழந்தைகள் உள்பட 120 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. 

எனவே, பெற்றெடுக்கும் போது ஆண் குழந்தைகளைக் கொண்டாடும் மக்கள் மனங்கள், தத்தெடுக்கும் பெண் குழந்தைகளைத்தான் அதிகம் கொண்டாடுகிறது என்பது வரவேற்கத்தக்க மாற்றம்தான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com