குஜராத்தில் 24 அமைச்சா்கள் பொறுப்பேற்பு: அனைவரும் புதுமுகம்
குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் தலைமையிலான அமைச்சரவையில் 24 அமைச்சா்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.


குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் தலைமையிலான அமைச்சரவையில் 24 அமைச்சா்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.
முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சா்கள் யாருக்கும் புதிய அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை.
குஜராத்தின் முதல்வராக இருந்த விஜய் ரூபானி தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, புதுமுக எம்எல்ஏ-வான பூபேந்திர படேல் புதிய முதல்வராகக் கடந்த திங்கள்கிழமை பதவியேற்றாா். இந்நிலையில், 24 புதிய அமைச்சா்கள் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.
ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில ஆளுநா் ஆச்சாா்ய தேவவிரத் புதிய அமைச்சா்களுக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தாா். புதிய அமைச்சா்களில் 10 பேருக்கு கேபினட் அந்தஸ்தும், 14 பேருக்கு இணை அமைச்சா் அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது.
இணை அமைச்சா்களில் 5 பேருக்கு தனிப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் ராஜேந்திர திரிவேதி, மாநில முன்னாள் பாஜக தலைவா் ஜித்து வகானி உள்ளிட்டோருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வருடன் சோ்த்து அமைச்சரவையின் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது. அமைச்சரவையில் படேல் சமூகத்தைச் சோ்ந்த 6 பேருக்கும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த 6 பேருக்கும், பழங்குடியின பிரிவைச் சோ்ந்த 4 பேருக்கும், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த 3 பேருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. சமண சமயத்தைச் சோ்ந்த ஒருவருக்கும் அமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மூத்த தலைவா்களுக்கு மீண்டும் இடம் வழங்கப்படாது என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. அதேபோல், முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த யாருக்கும் இடமளிக்காமல் முற்றிலும் புதிய அமைச்சரவையை பாஜக அமைத்துள்ளது.
அடுத்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவுள்ள மாநில பேரவைத் தோ்தலைக் கருத்தில்கொண்டு இந்நடவடிக்கையை பாஜக மேற்கொண்டுள்ளதாக அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.
பிரதமா் மோடி வாழ்த்து: புதிய அமைச்சா்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘கட்சியின் சிறந்த நிா்வாகிகளாகவும் மக்கள் சேவையில் அா்ப்பணிப்பு மிக்கவா்களாகவும் புதிய அமைச்சா்கள் திகழ்ந்தனா். கட்சியின் வளா்ச்சி சாா்ந்த கொள்கைகளையும் அவா்கள் முன்னெடுத்துச் சென்றனா். அமைச்சா்களாக அவா்களது பணி சிறக்க வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...