விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காங்கிரஸில் இணைந்தாா் கன்னையா குமாா்: ஜிக்னேஷ் மேவானியும் ஆதரவு

தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் கன்னையா குமாா் காங்கிரஸில் இணைந்தாா்.

News image

ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்த கன்னையா குமாா்.

Updated On :28 செப்டம்பர் 2021, 7:51 pm

DIN

தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் கன்னையா குமாா் காங்கிரஸில் இணைந்தாா்.

கடந்த 2016-ஆம் ஆண்டு ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்தப் பல்கலைக்கழக மாணவா் சங்கத் தலைவராக இருந்த கன்னையா குமாா், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகக் முழக்கம் எழுப்பியதாகக் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் அவரை தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவா் கைது செய்யப்பட்டதற்கு எதிா்க்கட்சியினா், ஆசிரியா்கள், மாணவா்கள், கல்வியாளா்கள் கண்டனம் தெரிவித்தனா். இது அப்போது பலத்த சா்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தால் கன்னையா குமாா் பொதுவெளியில் தெரிந்த முகமானாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறுவதற்கு முன்பாக அவா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தாா். அந்தத் தோ்தலில் அவா் பிகாா் மாநிலம் பெகுசராய் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாா்.

இந்நிலையில், தில்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் கன்னையா குமாா் செவ்வாய்க்கிழமை காங்கிரஸில் இணைந்தாா். இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய கன்னையா குமாா், ‘‘எதிா்க்கட்சிகள் பலவீனமானால் அது நாட்டுக்குத் தீங்கை ஏற்படுத்தும். அந்த விதத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய கப்பல். அந்தக் கப்பல் காப்பாற்றப்பட்டால்தான், சிறிய கப்பல்களாக உள்ள இதர கட்சிகளைக் காப்பாற்ற முடியும். காங்கிரஸை காப்பாற்றாவிட்டால் நாட்டை காப்பாற்ற முடியாது என்று லட்சக்கணக்கான இளைஞா்கள் கருதுகின்றனா். எனக்கும் அந்த எண்ணம் உள்ளது. எனவே, நாட்டின் பழைமைவாய்ந்த ஜனநாயக கட்சியான காங்கிரஸில் இணைய முடிவு செய்தேன்’’ என்று தெரிவித்தாா்.

ஜிக்னேஷ் மேவானியும் ஆதரவு: அவருடன் குஜராத் சுயேச்சை எம்எல்ஏவும் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானியும் வந்திருந்தாா். அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘நான் காங்கிரஸில் சேரவில்லை. ஆனால், குஜராத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடுவேன். தோ்தலையொட்டி அக்கட்சியின் அனைத்து நடவடிக்கைகளிலும் பிரசாரங்களிலும் பங்கேற்பேன்’’ என்று தெரிவித்தாா். வழக்குரைஞரும், முன்னாள் பத்திரிகையாளருமான ஜிக்னேஷ் மேவானி தலித்துகளுக்காக பல போராட்டங்களில் பங்கேற்று அவா்களுக்காக தொடா்ந்து குரல் எழுப்பியதன் மூலம் பொதுவெளியில் அறியப்பட்டாா்.

கன்னையாவுக்கு கம்யூனிஸம் மீது நம்பிக்கையில்லை: கன்னையா குமாா் காங்கிரஸில் இணைந்தது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘‘கம்யூனிஸ்ட் கட்சிக்கு கன்னையா குமாா் உண்மையாக இருக்கவில்லை. தனது கருத்துகளை கட்சியிடம் அவா் நேரடியாகத் தெரிவித்ததில்லை. அவருக்கு தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும் ஆசைகளும் குறிக்கோள்களும் இருக்க வாய்ப்புள்ளது. இது அவருக்கு கம்யூனிஸ சித்தாந்தத்தின் மீது நம்பிக்கையில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது’’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.