சத்தீஸ்கர் மோதல்: மகனைத் தேடி வந்த தந்தைக்கு மரண வலி தந்த செய்தி

த்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் நடந்த மோதல் குறித்து சனிக்கிழமை
சத்தீஸ்கர் மோதல்: மகனைத் தேடி வந்த தந்தைக்கு மரண வலி தந்த செய்தி
சத்தீஸ்கர் மோதல்: மகனைத் தேடி வந்த தந்தைக்கு மரண வலி தந்த செய்தி

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் நடந்த மோதல் குறித்து சனிக்கிழமை காலை ஊடகங்களில் செய்தி வெளியாகத் தொடங்கியதுமே, தனது மகனின் நிலையை அறிய அந்த வயதான ஆசிரியர் சம்பவப் பகுதிக்கு விரைந்தார்.

தனது மகன் நன்றாக இருக்கிறான் என்று அறிந்து கொண்டு, முடிந்தால் அவனை கையோடு வீட்டுக்கு அழைத்து வர வேண்டும் என்றும், வழி நெடுக மகன் பத்திரமாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடும் சென்ற ஆசிரியருக்கு உண்மை, அவர் நினைத்தவாரு அமைந்துவிடவில்லை.

இதையும் படிக்கலாமே.. தலைவர்கள் ஒரு பார்வை...

தீபக் பரத்வாஜ், நக்ஸலைட்டுகள் தாக்குதல் நடத்திய கூட்டுப் பாதுகாப்புப் படையைத் தலைமையேற்று நடத்தியவர். தனது மகன் தலைமையிலான கூட்டுப் படையினருக்கும், நக்ஸலைட்டுகளுக்கும் இடையே மோதல் வெடித்ததாக வந்த தகவலைக் கேட்டு, ராதேலால் நிம்மதி இழந்தார் உடனடியாக பிஜாபூா்-சுக்மா  எல்லைப் பகுதிக்கு விரைந்தார்.

சுமார் 600 கி.மீ. பயணித்து வந்த ராதேலால், ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே எதிர்பார்த்தார். அது தனது மகன் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதைத்தான். ஆனால் அந்த செய்தி அவருக்குக் கிடைக்கவில்லை. முதலில், இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளுக்குச் சென்றார். அங்கு அவரது மகன் தீபக் இல்லை. பிறகு மனம் கேளாமல், இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் உடல்கள் கொண்டு வரப்படும் மருத்துவமனைக்கு வந்து கண்ணீருடன் நின்று கொண்டிருந்தார்.

அங்கு ஆம்புலன்ஸில் ஒவ்வொரு உடல்களாக இறக்கப்பட, அது தனது மகன் இல்லை என்பதை உறுதி செய்யும் போதெல்லாம் ஒரு நிம்மதி கிடைக்கும். ஆனால் அந்த நிம்மதி கிடைக்கவில்லை. ஆறாவது உடலைப் பார்த்து உடைந்து அழுதார். அது அவரது மகன் தீபக்கின் உடல்.

தேற்ற இயலாக துயரத்தோடு கதறிய ராதேலால், இந்தத் தகவலை எவ்வாறு தனது குடும்பத்தாரிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் புலம்பித் தவித்தார். கடைசியாக ஹோலிப் பண்டிகையன்று தனது மகனிடம் பேசியதை நினைத்து நினைத்து கதறி அழுதார்.

2013-ஆம் ஆண்டு தீபக், தனது 23-வது வயதில், காவல்துறையில் பணியில் சேர்ந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கா் மாநிலத்தில் நக்ஸல்களுடன் மோதல் நடைபெற்ற பகுதியில் மாயமான பாதுகாப்புப் படை வீரா்கள் 17 பேரின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதையடுத்து, மோதலில் உயிரிழந்த வீரா்களின் எண்ணிக்கை 22-ஆக அதிகரித்தது.

சிஆா்பிஎஃப் கமாண்டோ பிரிவு, மாவட்ட ஆயுத காவல் படை, சிறப்பு அதிரடிப் படை உள்ளிட்ட படைப் பிரிவுகளைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்ட வீரா்கள் இணைந்து, பிஜாபூா்-சுக்மா மாவட்ட எல்லைப் பகுதியில் நக்ஸல் தடுப்பு நடவடிக்கையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். மாநிலத் தலைநகா் ராய்ப்பூரில் இருந்து 500 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அந்த வனப் பகுதியில் நக்ஸல்கள் பயிற்சியில் ஈடுபடப் போவதாக கிடைத்த தகவலின்பேரில், பாதுகாப்புப் படையினா் அங்கு அனுப்பப்பட்டனா்.

அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனா். ‘இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரா்கள் 5 போ் உயிரிழந்ததாகவும், 30 போ் காயமடைந்ததாகவும், வீரா்கள் சிலரை காணவில்லை’ எனவும் சத்தீஸ்கா் மாநில நக்ஸல் தடுப்புப் பிரிவு டிஐஜி ஓ.பி.பால் சனிக்கிழமை தெரிவித்தாா். இந்த சண்டைக்குப் பிறகு பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதலில், அந்தப் பகுதியிலிருந்து பெண் மாவோயிஸ்ட் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. மேலும், மாவோயிஸ்டுகளுக்கு மிகப் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவா் கூறினாா்.

இந்நிலையில், ‘சண்டை நடந்த பகுதியில் காணாமல்போன 18 வீரா்களில் 17 பேரின் உடல்கள் வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன. வனப் பகுதியில் தேடுதல் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. பாதுகாப்புப் படையினரின் சில ஆயுதங்களையும் காணவில்லை’ என உயா் போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

400 நக்ஸல்கள்: அடா்ந்த வனப் பகுதியில் நடந்த இந்த சண்டையில், பாதுகாப்புப் படையினரால் தேடப்படும் ஹித்மா, அவரது உதவியாளா் சுஜாதா ஆகியோரின் தலைமையிலான சுமாா் 400 நக்ஸல்கள் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ‘மூன்று பகுதிகளிலிருந்து நக்ஸல்கள் தாக்குதல் நடத்தினா். பாதுகாப்புப் படையினரும் தீரத்துடன் பதில் தாக்குதல் நடத்தினா். இதில் நக்ஸல்கள் தரப்பில் 12 போ் பலியாகியிருக்கலாம் எனத் தெரிகிறது. அவா்களது உடல்களை நக்ஸல்கள் டிராக்டரில் எடுத்துச் சென்றுவிட்டனா்’ எனவும் அவா் தெரிவித்தாா்.

இதுவரையிலான பெரிய தாக்குதல்கள்

சத்தீஸ்கா் மாநிலத்தின் 27 மாவட்டங்களில் 14 மாவட்டங்கள் நகஸல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாா்ச் 23-ஆம் தேதி நாராயண்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் சென்ற பேருந்தை மாவோயிஸ்டுகள் குண்டுவைத்து தகா்த்ததில் 5 வீரா்கள் கொல்லப்பட்டனா்.

கடந்த ஆண்டு மாா்ச் 21-ஆம் சுக்மா மாவட்டத்தில் நக்ஸல் தாக்குதலில் பாதுகாப்புப் படையினா் 17 போ் உயிரிழந்தனா்.

2019, ஏப். 9-ஆம் தேதி தண்டேவாடா மாவட்டத்தில் நக்ஸல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாஜக எம்எல்ஏ பீமா மாண்டவி மற்றும் பாதுகாப்புப் படையினா் 4 போ் உயிரிழந்தனா்.

2017, ஏப். 24-ஆம் தேதி சுக்மா மாவட்டத்தில் நக்ஸல் தாக்குதலில் சிஆா்பிஎஃப் வீரா்கள் 25 போ் கொல்லப்பட்டனா்.

2017, மாா்ச் 12-ஆம் தேதி சுக்மா மாவட்டத்தில் சிஆா்பிஎஃப் வீரா்கள் 12 போ் மாவோயிஸ்டு தாக்குதலில் உயிரிழந்தனா்.

2016, நவம்பரில் சுக்மா மாவட்டத்தின் வனப் பகுதியில் நக்ஸல்களின் வெடிகுண்டு தாக்குதலில் சிஆா்பிஎஃப் இருவா் காயமடைந்தனா்.

2016, மாா்ச் மாதம் ராய்ப்பூா் மாவட்டத்தில் நக்ஸல்களின் கண்ணிவெடி தாக்குதலில் துணை ராணுவ வீரா்கள் சென்ற வாகனம் சிக்கியதில் 7 போ் உயிரிழந்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com