அக்டோபரில் 3-வது அலை உச்சமடையும்; குழந்தைகளைத் தாக்கும்: தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர் குழு

வருகிற அக்டோபர் மாதம் கரோனா மூன்றாவது அலை உச்சத்தை அடையும் என்றும் குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன நிபுணர் குழு தெரிவித்துள்ளது. 
அக்டோபரில் 3-வது அலை உச்சமடையும்; குழந்தைகளைத் தாக்கும்: தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர் குழு

கரோனா மூன்றாவது அலை வருகிற அக்டோபர் மாதம் உச்சத்தை அடையும் என்றும் இந்த அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவன நிபுணர் குழு தெரிவித்துள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் நிபுணர் குழு, சமீபத்தில் கரோனா மூன்றாவது அலை குறித்து ஓர் ஆய்வு மேற்கொண்டு அதுகுறித்த அறிக்கையை பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளது. 

அதில், 'நாட்டில் கரோனா மூன்றாவது அலை வருகிற அக்டோபர் மாதம் உச்சமடையலாம். குழந்தைகளையே அதிகம் தாக்க வாய்ப்புள்ளது. அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிக்கப்படும்போது தேவையான மருத்துவர்கள், ஊழியர்கள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவை தேவைப்படும் அளவுக்கு நாட்டில் இருப்பு இல்லை. குழந்தைகளுக்கான சுகாதாரத் தேவையை அதிகரிக்க வேண்டும். 

இரண்டாவது அலை பாதிப்பில் 50% பாதிப்பு மூன்றாவது அலையில் ஏற்படலாம். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தலைமையிலான குழு, வரும்காலத்தில் கரோனா தொற்று அதிகரிப்பில் 100 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டால் அதில் 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழ்நிலை வரலாம் என்று கூறியுள்ளது. 

முன்னதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், 'கரோனா மூன்றாவது அலையை சமாளிக்க மத்திய அரசு முழுமையாக தயாராக உள்ளது. இதற்காக 23,123 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மூன்றாவது அலை, மற்றவர்களைவிட குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில் குழந்தைகளுக்கான மருத்துவத்தை வலுப்படுத்துவதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com