தலைநகரை மீண்டும் தாக்குமா கரோனா? நிபுணர்கள் கணிப்பு

தற்போது கரோனா தொற்று குறைந்திருந்தாலும், விரைவில் மூன்றாவது அலை தாக்குமா? அல்லது தலைநகர், கரோனா பேரிடரை வெற்றிகொள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தலைநகரை மீண்டும் தாக்குமா கரோனா? நிபுணர்கள் கணிப்பு
தலைநகரை மீண்டும் தாக்குமா கரோனா? நிபுணர்கள் கணிப்பு


புது தில்லி: தலைநகர் தில்லியில் கரோனா இரண்டாம் அலை நடத்திய கோரத்தாண்டவத்தை அதற்குள் யாரும் மறந்திருக்க முடியாது. தற்போது கரோனா தொற்று குறைந்திருந்தாலும், விரைவில் மூன்றாவது அலை தாக்குமா? அல்லது தலைநகர், கரோனா பேரிடரை வெற்றிகொள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த கேள்வியை நோக்கி சுகாதார மற்றும் மருத்துவ நிபுணர்கள் நடத்திய ஆய்வில் கிடைத்திருக்கும் தகவல் அவ்வளவு நல்லதாக இல்லை.

தலைநகர் தில்லியில், கரோனா மூன்றாவது அலை மிக விரைவில் அதாவது இன்னும் இரண்டு வாரத்தில் தனது ஆட்டத் தொடங்கக் கூடும் என்பதே அது. 

"புது தில்லிக்கு வரும் இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தில்லியில் ஏராளமானோர் பயணம் மேற்கொண்டுள்ளனர். குடும்ப உறவுகளை பார்த்து வந்துள்ளனர். சுதந்திர தினம் மற்றும் ரக்ஷசா பந்தன் விழாக்களை பலரும் கூட்டமாகக் கூடி கொண்டாடியுள்ளனர். இதனால், கரோனா தொற்று வேகமாகப் பரவியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை அப்படி நடந்திருந்தால், அதன் தாக்கம் இன்னும் 15 நாள்களில் தெரிய வந்துவிடும். நோய் எதிர்ப்பாற்றல் இருப்பவர்களுக்கு அறிகுறிகள் தெரியவராது. ஆனால், அவர்கள் தொற்றை மற்ற இரண்டு பேருக்காவது பரவியிருப்பார்கள்" என்கிறார் ஐசிஎம்ஆர்-ன் தொற்றுநோயியல் துறை நிபுணர், முன்னாள் விஞ்ஞானி, டாக்டர் லலித் காந்த்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த நிபுணர் இதனை மறுத்துள்ளார். தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்தாலும், கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்கிறார்.

கரோனா இரண்டாம் அலையின்போதே, தில்லியில் பெரும்பாலானோருக்கு கரோனா பாதித்துவிட்டது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் மற்றும் ஆறு மாத காலத்துக்குள் மீண்டும் கரோனா வராது. எனவே, பண்டிகை நாள்கள் என்பதால் கரோனா பாதிப்பு அதிகரித்தாலும், கடந்த ஏப்ரல் மாதத்தைப் போல கோரத்தாண்டவமாக இருக்காது. இந்த கரோனா தொற்று எப்போதுமே மிகச் சரியாக கணிக்க முடியாததாகவே இருந்துள்ளது என்கிறார்.

புது தில்லியில் கடந்த செவ்வாயன்று 64 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 37 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானது. இது 0.06 சதவீதமாகும்.

ஆனால், இதுபோல கரோனா தொற்று குறைந்திருப்பதை சாதகமாக பார்க்க முடியாது. அது எப்போது வேண்டுமானாலும் தீவிரமடையலாம், எனவே, கட்டுப்பாடுகளை மக்கள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்கிறால் லலித் காந்த்.

ஒரு வேளை தற்போது கரோனா அதிகரிக்காவிட்டாலும் கூட, அது அக்டோபரில் அதிகரிக்க வாய்ப்புண்டு. அதிதீவிரமடைந்த அல்லது உருமாறிய கரோனா தொற்று பரவி வருவது குறித்து அரசுதான் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். உருமாறிய கரோனா எப்போது வேண்டுமானாலும் வேகமெடுக்கும். இதற்கு எந்த தேதியும், நேரமும் நிர்ணயிக்க முடியாது. தில்லியில் ஏற்கனவே பலருக்கும் கரோனா பாதித்திருந்தாலும், பாதிக்கும் மேற்பட்டவர்கள் முதல் தவணை செலுத்தியிருந்தாலும் கூட, கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற வேண்டியது அவசியம் என்கிறார்.

தடுப்பூசி பற்றாக்குறை
தேசிய தலைநகர் தில்லியில் தற்போது கைவசம் இருக்கும் கரோனா தடுப்பூசி ஒரே ஒரு நாளைக்குத்தான் போதுமானதாக இருக்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. செவ்வாயன்று தில்லியில் 3,79,030 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதம் 1,76,760 கோவாக்சின் தடுப்பூசியும், 2,02,270 கோவிஷீல்டு தடுப்பூசியும்தான் பாக்கி உள்ளன என்கிறது புள்ளிவிவரம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com