ஆகஸ்டில் நடக்குமா நீட் தேர்வு, என்ன சொல்கிறது தேசிய தேர்வு முகமை?

ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்படலாம் என்று தேசிய தேர்வு முகமை தரப்பில் கூறப்படுகிறது.
ஆகஸ்டில் நடக்குமா நீட் தேர்வு? என்ன சொல்கிறது தேசிய தேர்வு முகமை
ஆகஸ்டில் நடக்குமா நீட் தேர்வு? என்ன சொல்கிறது தேசிய தேர்வு முகமை

புது தில்லி: ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்படலாம், தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை இது குறித்த முடிவை இன்னும் எடுக்கவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் தற்போதிருக்கும் கரோனா சூழ்நிலை தொடர்ந்து குறைந்து வரும்பட்சத்தில் மருத்துவக் கல்வியில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வானது செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக, நிகழாண்டுக்கான நீட் தோ்வு வரும் செப்டம்பா் மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தோ்வு முகமையின் பெயரில் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின. அவை முற்றிலும் போலியானவை என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்திருந்தது.

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை நடத்துவது குறித்து தேசிய மருத்துவ ஆணையத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளுடன்  கலந்தாலோசனை நடந்து வருவதாக தேசிய தேர்வு முகமையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயம் தொடர்பாக, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோருடன் விரைவில் விவாதிக்கப்படும் என்றும் நீட் தேர்வில் பங்கேற்கவிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வுக்குத் தயாராகவும் போதிய கால அவகாசம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான பணிகளே இன்னும் தொடங்காத நிலையில், நீட் தேர்வை நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. தற்போதிருக்கும் பேரிடர் காலத்தில் தேர்வாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையும், மருத்துவக் கல்லூரிகளில் உரிய காலத்தில் வகுப்புகள் தொடங்குவதையும் ஒரு சேர உறுதி செய்ய வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு கரோனா பேரிடர் காலத்தின் மத்தியில், நீட் தேர்வை ஒத்திவைக்க பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையிலும், கடந்த ஆண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13ல் நடைபெற்றது. இந்த ஆண்டும், அதுபோல நீட் தேர்வை நடத்த வேண்டும் என்றே மாணவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

வழக்கமாக, நீட் தேர்வுக்கு 60 நாள்களுக்கு முன்பு, விண்ணப்பிக்கும் பணிகள் தொடங்கும். ஆனால் இதுவரை விண்ணப்பிக்கும் பணிகள் தொடங்கவில்லை. ஜேஇஇ தேர்வுகள் ஜூலை 20 மற்றும் ஆகஸ்ட் 2ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஜேஇஇ (முதன்மை) தேர்வு கணினி முறையில் நடைபெறும். இது பல நாள்கள் கூட நடைபெறும், இதனால், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதும், தேர்வு மையங்களை அமைப்பதும் மிகவும் எளிது. ஆனால், நீட் தேர்வு வினாத்தாள் வழங்கி நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்பார்கள் என்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com