நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பில் உள்ளாரா ஃபட்னவிஸ்? பகீர் தகவலை வெளியிட்ட அமைச்சர்

பாஜக மூத்த தலைவர் ஃபட்னவிஸ் நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பில் உள்ளார் என மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
நவாப் மாலிக் (கோப்புப்படம்)
நவாப் மாலிக் (கோப்புப்படம்)

சொகுசு கப்பலில் போதை பொருள் சிக்கிய விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டது தொடர்பாக மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக், அம்மாநில முன்னாள் முதல்வர் ஃபட்னவிஸ் ஆகியோருக்கிடையே வார்தை போர் வெடித்துவருகிறது. 

இந்நிலையில், நவாப் மாலிக் இன்று மேலும் ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அதாவது, பாஜக மூத்த தலைவர் ஃபட்னவிஸ் நிழல் உலக தாதாக்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் ஆர்யன் கான் வழக்கிலிருந்து நீக்கப்பட்ட போதை தடுப்பு பிரிவு அலுவலர் சமீர் வாங்கடே விசாரணை செய்த கள்ள நோட்டு வழக்கின் குற்றவாளிகளை பாதுகாத்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். 

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "ஃபட்னவிஸ், விவகாரத்தை திசை திருப்ப முயற்சி செய்கிறார். பல்வேறு வழக்குகளில் அப்பாவிகள் மீது வழக்கு பதிவு செய்த ஒரு அலுவலரை (வாங்கடே) காப்பாற்ற முயற்சி செய்கிறார். நிழல் உலகத்துடன் தொடர்பில் உள்ளவர்களை தலைவர்களாக்கினீர்கள். முன்னா யாதவை கட்டுமானத் தொழிலாளர் வாரியத்தின் தலைவராக்கவில்லையா?  மௌலானா ஆசாத் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் தலைவராக ஹைதர் ஆசாமை ஆக்கியுள்ளீர்கள். 

2016ல் பணமதிப்பு நீக்கம் மேற்கொள்ளப்பட்டபோது, ​​கருப்புப் பணம், பயங்கரவாதம், கள்ள நோட்டுகளை ஒழிக்க வேண்டும் என்று மோடி கூறினார். (ஆனால்) அக்டோபர் 8 (2017) வரை போலி நோட்டுகள் தொடர்பான வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை, ஏனெனில் ஃபட்னாவிஸின் பாதுகாப்பின் கீழ் இது செயல்பட்டு வந்தது. 

அப்போது, 14.56 கோடி ரூபாய் மீட்கப்பட்டது. ஆனால் அந்த பிரச்னையை ஃபட்னாவிஸ் தீர்த்துவிட்டார். மும்பையிலும், புனேவிலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். 8 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, விவகாரம் முடிவுக்கு வந்தது. இது தேசிய புலனாய்வு முகமைக்கு அனுப்பப்படவில்லை. வழக்கு அடுத்த கட்டத்திற்கு செல்லவே இல்லை. ஏனெனில் இந்த மோசடியின் பின்னணியில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த மோசடிக்கு பின்னால் காங்கிரஸ் தலைவர் உள்ளார் என்று சொன்னார்கள்.

ஆனால், அதில் உண்மை இல்லை. காங்கிரஸ் மீது பழி சுமத்த திட்டம் தீட்டப்பட்டது. சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக ஹாஜி அராபத் ஷேக் நியமிக்கப்பட்டார். அவரது சகோதரர் இம்ரான் இந்த குற்றத்தில் ஈடுபட்டு பிடிபட்டார். அப்போது, வருவாய் புலனாய்வு துறையின் இயக்குநராக இருந்த சமீர் வாங்கடேதான் இந்த வழக்கை விசாரித்தார். ஆனால், ஃபட்னவிஸ், சமீர் வாங்கடே ஆகியோர் இணைந்து இந்த வழக்கை முடித்துவிட்டனர்" என்றார்.

இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஃபட்னவிஸ் ட்விட்டரில், "பன்றியுடன் ஒருபோதும் மல்யுத்தம் செய்யக்கூடாது என்று நான் நீண்ட காலத்திற்கு முன்பே கற்றுக்கொண்டேன். ஒன்று நீங்கள் அழுக்காகிவிடுவீர்கள். மேலும், அது பன்றிக்கு பிடிக்கும்" என்ற பெர்னாட்ஷாவின் வாக்கியத்தை மேற்கோள்காட்டி விமரிசனம் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com