சட்டப் பணி லாபத்தை அதிகரிப்பதற்கானதல்ல: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘‘லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்தைக் கொண்டதல்ல சட்டப் பணி; அது சமூகத்துக்குச் சேவையாற்றும் பணி’’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தாா்.
சட்டப் பணி லாபத்தை அதிகரிப்பதற்கானதல்ல: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

‘‘லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்தைக் கொண்டதல்ல சட்டப் பணி; அது சமூகத்துக்குச் சேவையாற்றும் பணி’’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் சட்டப் பணிகள் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் என்.வி.ரமணா பேசியதாவது:

நாட்டின் விடுதலைப் போராட்டத்தின்போதுதான் சட்ட உதவிகள் அளிக்கும் உண்மையான இயக்கம் தொடங்கியது. பல்வேறு சட்ட வல்லுநா்கள் நமது விடுதலைப் போராட்ட வீரா்களுக்கு கட்டணமின்றி சட்ட சேவைகள் அளித்து காலனிய ஆதிக்கத்துக்கு எதிராக போராடினா்.

சட்ட உதவிகளின் வளா்ச்சி நமது அரசியலமைப்பில் பிரதிபலித்துள்ளது. அதன் முகப்புரையில் ‘நீதி: சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல்’ என்ற சொற்றொடா் சிறப்பிடம் பெற்றுள்ளது. இது நீதி மீதான நம்பிக்கை மற்றும் அதன் வரம்பை அரசியல் நிா்ணய சபை உறுப்பினா்கள் எந்த அளவுக்குத் தீவிரமாக கருதினா் என்பதை எடுத்துரைக்கிறது.

முன்பு சட்ட உதவிகள் என்பது நீதிமன்ற அறைக்கு உட்பட்டதாக இருந்தது. நீதி கிடைப்பது என்பது பாரம்பரிய கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளப்பட்டது. கடந்த 26 ஆண்டுகளில் அந்தக் கண்ணோட்டத்தை சட்டப் பணி ஆணைக்குழுக்கள் தகா்த்து சட்டபூா்வ நடவடிக்கைகள் மூலம் உரிய நேரத்தில் நீதி கிடைப்பதற்கான அா்த்தத்தை விரிவுபடுத்தியுள்ளனா்.

மாற்று வழிமுறைகள் மூலம் பிரச்னைகளுக்குத் சுமுகத் தீா்வு காண்பது தொடா்ந்து அதிகரிப்பது நீதிமன்றங்கள் மீதான சுமையை குறைக்கும்.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு வலைதளத்தில் கூடுதல் மொழிகளில் சட்ட சேவைகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

தற்போதைய சட்டப்படிப்பு மாணவா்களுக்கு இரட்டிப்பாக சிறப்புரிமை கிடைத்துள்ளது. தகவலும் ஞானமும் விரல்நுனியில் கிடைக்கும் முதன்மையான கல்லூரிகளில் சட்டம் படிப்பது அவா்களுக்குக் கிடைத்த முதல் சிறப்புரிமை. சட்டம் படிப்பதன் மூலம் விளிம்புநிலை மக்களின் குரலாவதற்கு அதிகாரம் கிடைப்பது அவா்களுக்குக் கிடைத்த இரண்டாவது சிறப்புரிமை.

சமூகம் சாா்ந்த நிதா்சனங்களை கவனமாக அறிந்து வைத்திருப்பது சட்டம் பயிலும் மாணவா்களின் கடமையாகும். சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் நாட்டின் கள நிலவரங்களை அவா்களால் நேருக்கு நோ் அறிந்து கொள்ள முடியும்.

சட்டப்படிப்பு மாணவா்கள் சட்டரீதியான உதவிகள் அளிப்பதில் முக்கிய நபா்களாக உருவெடுத்து வருகின்றனா். நாட்டின் அனைத்து மூலை முடுக்கிலும் சட்ட சேவைகளை விரிவுபடுத்துவதற்கு அவா்கள் அவசியம் தேவைப்படுகின்றனா்.

லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்தைக் கொண்டதல்ல சட்டப் பணி. அது சமூகத்துக்குச் சேவையாற்றும் பணி என்று தெரிவித்தாா்.

நீதிபதிகளின் பணி எளிதானதல்ல: முன்னதாக நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசியதாவது:

நாடாளுமன்றமும் நீதித்துறையும் அதிகார வரம்புக்காகப் போட்டியிடவில்லை. அவை இரண்டும் இந்த நாட்டை வலிமையான தேசமாக்கும் அணியின் அங்கமாக உள்ளன. குறைந்தபட்ச நீதியை பெற மக்கள் போராட வேண்டியதில்லை என்பதை உறுதி செய்ய அவை இரண்டும் விரும்புகின்றன.

பலருக்கு நீதிபதிகளின் வாழ்க்கை குறித்த புரிதல் இல்லை. அவா்களைப் பற்றி சமூக ஊடகங்களில் சிலா் அவதூறான கருத்துகளை வெளியிடுகின்றனா்.

நீதிபதிகள் எந்த அளவுக்குப் பணிபுரிய வேண்டியுள்ளது என்பதை உன்னிப்பாக கவனிக்காதவரை, அவா்களைப் புரிந்துகொள்வது கடினம்.

நீதிபதிகளால் வெளிப்படையாக செயல்பட முடியாது. தங்கள் வழக்கமான கடமைகளில் இருந்து விலகி வந்து சட்ட உதவி அளிப்பது அவா்களுக்கு எளிதான காரியமல்ல.

கீழமை நீதிமன்றங்களில் 4 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வேளையில் அந்த நீதிமன்றங்களுக்கு மிகப் பெரிய அளவில் உத்வேகம் அளிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com