‘பேருந்துக்குள் செல்போனில் பாட்டு கேட்கத் தடை’: கர்நாடக போக்குவரத்துக் கழகம்

கர்நாடக மாநில அரசுக்கு சொந்தமான பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் பிறருக்கு தொந்தரவு தரும் வகையில் செல்போனில் பாட்டு கேட்க தடை விதித்துள்ளது.
‘பேருந்துக்குள் செல்போனில் பாட்டு கேட்கத் தடை’: கர்நாடக போக்குவரத்துக் கழகம்
‘பேருந்துக்குள் செல்போனில் பாட்டு கேட்கத் தடை’: கர்நாடக போக்குவரத்துக் கழகம்

கர்நாடக மாநில அரசுக்கு சொந்தமான பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் பிறருக்கு தொந்தரவு தரும் வகையில் செல்போனில் பாட்டு கேட்க தடை விதித்துள்ளது.

கர்நாடக அரசு நிறுவனமான கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம், கர்நாடகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகளை இயக்கி வருகிறது. மேலும், பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம், கோவா போன்ற அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் சொகுசு பேருந்துகள், நடுத்தர, சாதாரண பேருந்துகளும் அடக்கம். 

பேருந்துகளில் பயணிப்போர் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குறிப்பாக இரவுநேரங்களில் தூங்கிக்கொண்டிருக்கும்போது கைபேசிகளின் வழியாக சத்தமாக பாடல்களை  கேட்பது, திரைப்படங்களை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், இது தொடர்பான மோதல்களும் அவ்வப்போது ஏற்பட்டு வந்துள்ளது. பேருந்துகளில் சத்தமாக பாடல்களை கேட்கவும், திரைப்படங்களை பார்க்கவும் தடைவிதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கர்நாடக அரசுக்கு சொந்தமான பேருந்துகளில் பயணிகள் தமது கைபேசியில் சத்தமாக பாடல்கள் கேட்கவும், திரைப்படங்களை பார்க்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதை மீறுவோர் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்படுவார்கள் என்று கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் சிவயோகி சி.கலசத் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளார். 

அந்த உத்தரவில் அவர் மேலும் கூறுகையில், "கர்நாடக மோட்டார் வாகன விதிமுறைகள், 1989-இன்படி விதி-94(1)(5)-இன்படி கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிகள் தத்தமது கைபேசிகளில் சத்தமாக பாடல்கள்/கவிதைகள் கேட்பதால், செய்திகள், திரைப்படங்களை பார்ப்பதால் ஒலிமாசு ஏற்படுகிறது.

எனவே, ஒலி மாசை கட்டுப்படுத்தும் வகையில், அரசு பேருந்துகளில் பயணிகள் கைபேசிகளில் இருந்து சப்தமாக  பாடல்கள்/கவிதைகள் கேட்கவும், செய்திகள், திரைப்படங்களை பார்க்கவும் தடை விதிக்கப்படுகிறது. விதிமீறி செயல்பட்டால், அது சட்டத்திற்கு புறம்பானது என்பதை ஓட்டுநர்/நடத்துநர் சுட்டுக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

அதையும் மீறி சத்தமாக கைபேசியில் பாடல்களை கேட்டாலோ, திரைப்படங்களை பார்த்தாலோ உடனடியாக பேருந்தில் இருந்து அந்த பயணியை இறக்குவதற்கு ஓட்டுநர்/நடத்துநருக்கு சட்டப்படி அதிகாரம் அளிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட பயணிகளுக்கு பயணச்சீட்டு கட்டணத்தையும் திருப்பி அளிக்க தேவையில்லை. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது." என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com