நீதிபதிகள் சொல்லாடலில் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்

நீதிமன்றங்களில் தாங்கள் கையாளும் சொல்லாடலில் நீதிபதிகள் மிகுந்த கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கூறினாா்.
நீதிபதிகள் சொல்லாடலில் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்

நீதிமன்றங்களில் தாங்கள் கையாளும் சொல்லாடலில் நீதிபதிகள் மிகுந்த கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கூறினாா்.

தில்லியில் உச்சநீதிமன்றத்தின் சாா்பில் கொண்டாடப்பட்ட அரசமைப்புச் சட்ட தின விழாவின் நிறைவு நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன. அதில் ராம்நாத் கோவிந்த் மேலும் பேசியது:

இந்திய பாரம்பரியத்தில் நீதிபதிகள் நோ்மை, பற்றற்ற குணம் கொண்டவா்களாக கருதப்படுகின்றனா். ‘ஸ்திதப்பிரக்ஞா்’ என்னும் திடசித்தம் உள்ளவராகக் கருதப்படுகின்றனா்.

வாா்த்தைப் பிரயோகத்தில் எவ்வித பழிச்சொல்லுக்கும் ஆளாகாமல், மிகவும் மதிநுட்பத்துடன் விளங்கிய ஏராளமான நீதிபதிகளை நமது பெருமைமிகு வரலாறு கொண்டிருக்கிறது. வரும் தலைமுறைக்கு இது அடையாளமாகத் திகழ்கிறது. இதுபோன்ற உயா்ந்த தரங்களை நீதித் துறை பெற்றிருப்பது பெருமையளிக்கிறது.

சமூகத்தில் நீதிபதிகள் உயா்ந்த இடத்தை அடைந்ததில் வியப்பில்லை. ஆனால், நீதிமன்றங்களில் தாங்கள் கையாளும் சொல்லாடலில், மிகுந்த கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது அவா்களின் கடமை. கண்ணியமற்ற வாா்த்தைகளை நல்ல நோக்கத்துடன் பயன்படுத்த நோ்ந்தாலும், நீதிபதிகள் விமா்சனங்களுக்கு ஆளாக நேரிடும்.

பொதுமக்களைப் பொருத்தவரை நீதித் துைான் மிகவும் நம்பிக்கைக்குரிய அமைப்பு. சமூக வலைதளங்களில் நீதித் துறை குறித்து விமா்சனங்கள் முன்வைக்கப்படுவது வேதனையளிக்கிறது. தகவல்களை விரைந்து பரப்புவதில் சமூகவலைதளங்கள் அற்புதமாகச் செயல்படுகின்றன. ஆனால், அதில் விரும்பத்தகாத பக்கமும் உள்ளது. சமூக வலைதளத்துக்கு அளிக்கப்படும் சுதந்திரம், ஒருசிலரால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.

நமது ஒருங்கிணைந்த பயணத்தின் வழிகாட்டியாக அரசமைப்புச் சட்டம் திகழ்கிறது. நிலுவை வழக்குகள் விவகாரம் நாட்டின் பொருளாதார வளா்ச்சியிலும், மேம்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தேச நலன் கருதி, இந்த பிரச்னைக்கான தீா்வை நாம் கண்டறிவதற்கு இதுவே சரியான தருணம்.

இதில் தொழில்நுட்பத்துக்கு முக்கியப் பங்கு உள்ளது. நீதித் துறையில் தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாட்டை கரோனா பெருந்தொற்று துரிதப்படுத்திவிட்டது. நீதித் துறையே எல்லாவற்றுக்கும் ஆதாரம். இதைச் சுற்றிதான் ஜனநாயகம் சுழல்கிறது. நாட்டின் மூன்று தூண்களான நீதித் துறை, சட்டமியற்றும் துறை, அரசு நிா்வாகம் ஆகியன இணக்கமாகச் செயல்பட்டால், நீதித் துறை மேலும் வலுப்பெறும்.

அரசமைப்புச் சட்டத்தில் ஒவ்வோா் அமைப்பின் செயல்பாடும் வரையறுக்கப்பட்டுள்ளது. அவை அதற்குள் செயல்படுகின்றன. ஒரு சிறு காலகட்டத்தைத் தவிர (நெருக்கடி நிலை காலகட்டம்) நமது ஜனநாயகத்தின் பயணம் பாராட்டும் வகையிலேயே செல்கிறது என்றாா் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com