
சோனியா காந்தி (கோப்புப்படம்)
மக்களவை, சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தொடர் தோல்விகளை சந்தித்துவரும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றுவருகிறது. அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்றுவரும் அக்கூட்டத்தில், "நான்தான் காங்கிரஸ் கட்சியின் முழு நேர தலைவர்" என சோனியா காந்தி அதிருப்தியாளர்களுக்கு பதில் அளித்துள்ளார்.
அமைப்பு ரீதியாக காங்கிரஸ் கட்சியில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் 'ஜி-23' தலைவர்கள் கோரிக்கை விடுத்துவந்த நிலையில், சோனியா காந்தி இக்கருத்துகளை தெரிவித்துள்ளார். முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர் கட்சியில் உள்ள பிரச்னைகள் குறித்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்கள். இந்த 23 பேர்தான் 'ஜி-23' தலைவர்கள் என்றழைக்கப்படுகிறார்கள்.
செயற்குழு கூட்டத்தில் விரிவாக பேசிய சோனியா, "இதை சொல்ல நீங்கள் அனுமதித்தால், நான்தான் காங்கிரஸ் கட்சியின் முழு நேர தலைவர் என்பதை சொல்வேன். அனுபவம் வாய்ந்த காங்கிரஸ் தலைவர். நான் எப்போதும் வெளிப்படைதன்மையை பாராட்டியுள்ளேன். ஊடகம் வழியாக பேச வேண்டிய தேவை இல்லை.
நேர்மையான சுதந்திரமான இந்த விவாதத்தில் கலந்து கொள்வோம். இங்கு அனைவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளை மட்டுமே வெளியே தெரிவிக்க வேண்டும். மன்மோகன் சிங், ராகுல் ஆகியோரைப் போலவே நானும் மற்ற தலைவர்களை பிரதமருடன் அழைத்துச் சென்று பேசியிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இதையும் படிக்க | காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது
நான் ஒத்த எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளுடன் தொடர்ந்து உரையாடி வருகிறேன். நாம் தேசிய பிரச்னைகள் குறித்து கூட்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளோம். நாடாளுமன்றத்திலும் எங்கள் வியூகத்தை ஒருக்கிணைத்துள்ளோம்" என்றார்.