பிரசாந்த் கிஷோரிடம் சரணடைகிறதா காங்கிரஸ்?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டது பேசுபொருளாக மாறியுள்ளது.
பிரசாந்த் கிஷோரிடம் சரணடைகிறதா காங்கிரஸ்?
பிரசாந்த் கிஷோரிடம் சரணடைகிறதா காங்கிரஸ்?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டது பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்தியத் தேர்தல் வரலாற்றில் வாக்காளர்களைக் கவர்வது என்பது தேர்தல் வாக்குறுதிகள் தொடங்கி புதிய அறிவிப்புகள் அறிவிப்பது என பல கட்டங்களை சந்தித்திருக்கிறது. இன்றைய இந்தியச் சூழலில் அதிகரித்துவரும் சமூக வலைத்தளப் பயன்பாடும் வாக்காளர்களைக் கவர்வதற்காக தளமாக பரிணமித்துள்ளது.

இந்நிலையில் பாஜகவின் மோடிக்கு தொடங்கி ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி, பஞ்சாபில் அமரீந்தர் சிங், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் என பல முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வெற்றியையும் பெற்றுத் தந்தவர் பிரசாந்த் கிஷோர்.

வாக்காளர்களை குறிப்பிட்ட அரசியல் கட்சிக்காக தயார்படுத்துவது குறித்து மாறுபட்ட கருத்துகள் எழுந்தாலும் இந்திய அரசியலில் இன்றைக்கு தவிர்க்க முடியாத இடத்தை பிரசாந்த் கிஷோர் அடைந்திருப்பது குறிப்பிட்டாக வேண்டிய ஒன்று.

இவற்றுக்கு மத்தியில், 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்குப் பிறகு அக்கட்சியில் முக்கியப் பதவியை எதிர்பார்த்த பிரசாந்த் கிஷோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிலிருந்து அக்கட்சிக்கு எதிராக தன்னுடைய வேலைகளைத் திட்டமிட்டுக் கொண்டார் பிரசாந்த் கிஷோர். 

தேர்தல் வெற்றிக்கு தன்னுடைய வேலைகள் மட்டுமே காரணம் என்கிற வகையில் அவரது செயல்பாடுகளும், பேட்டிகளும் இருந்தன. தங்களுடைய ஒட்டுமொத்த அரசியல் அனுபவத்தையும் அரசியல் கட்சிகள் அவரிடம் அடகு வைத்த நிலையில் தன்னை இந்தியத் தேர்தலின் முக்கிய அங்கமாக மாற்றிக் கொண்டார் பிரசாந்த் கிஷோர். 

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக சரிவை சந்தித்துவரும் காங்கிரஸ் கட்சி தற்போது பிரசாந்த் கிஷோரை நம்பியிருப்பது அரசியல் விநோதம். இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்கி நவீன இந்தியாவை கட்டமைத்தது வரை காங்கிரஸ் செய்த பங்களிப்புகளையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற எதையாவது செய்தாக வேண்டும் என்கிற தர்மசங்கடமான நிலையில் காங்கிரஸ் உள்ளது. 

இவற்றுக்கு மத்தியில் காங்கிரஸ் அல்லாத மூன்றாம் அணியை அமைக்க மம்தா பானர்ஜி முயன்று வருவது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பிய பிரசாந்த் கிஷோர் கடுமையான வார்த்தைகளால் அக்கட்சியை விமர்சித்தார். குறிப்பாக ராகுல் காந்தியை குறித்தும், அவரது தலைமை குறித்தும் கேள்வி எழுப்பினார். 

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கை மற்றும் அதற்குள்ள இடம் ஒரு வலுவான எதிர்க்கட்சிக்கு இன்றியமையாதது. ஆனால் காங்கிரஸின் தலைமை என்பது ஒரு தனிநபரின் கொடுக்கப்பட்ட உரிமை அல்ல. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் கட்சி 90% க்கும் அதிகமான தேர்தல்களில் தோல்வியடைந்தபோது. எதிர்க்கட்சிகளுக்கு யார் தலைமை விகிக்க வேண்டும் என்பது ஜனநாயக முறையில் முடிவு செய்யப்படும்" என பதிவிட்டார்.

பிரசாந்த் கிஷோரின் இந்தக் கருத்துகள் காங்கிரஸ் உடனான தேர்தல் பணிகளுக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இருதரப்பும் முன்வந்து புதிய வாசலைத் திறந்துள்ளன.

காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் முக்கியத் தலைவர்களின் அதிருப்தி, தலைமை பலவீனம், தொடர் தேர்தல் தோல்விகள் என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளது காங்கிரஸ் - பிரசாந்த் கிஷோர் கூட்டணி என்கிற நிலையை உறுதிபடுத்துகின்றன. இந்த அறிக்கையின் மீது ஒருவார காலத்திற்குள் முடிவெடுக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளது.

அதேபோல் எதிர்வரும் நாள்களில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும், அவருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் மூலம் மீண்டும் தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ள பாஜகவிற்கு மாற்றாக வலிமையான எதிர்க்கட்சி கூட்டணி இல்லாத நிலையில் இவ்விரு தரப்பினரின் அடுத்த கட்ட நகர்வுகள் அரசியல் அரங்கில் முக்கிய கவனம் பெற்றுள்ளன. 

எதுஎப்படியாகினும் மக்களைச் சென்றடைவதும், அவர்களுடன் இணைந்திருப்பதுமே எந்தவொரு அரசியல் கட்சியும் பிழைத்திருப்பதற்கான வழி என்பதை அரசியல் கட்சிகள் உணராமல் அவற்றுக்கு விடிவுகாலம் இல்லை என்பதே உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com