இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

மக்கள் நலப் பணியாளர்கள் வழக்கில் எதிர்மனுதாரர்கள் தரப்பில் வாதம்: விசாரணை ஆக.11-க்கு ஒத்திவைப்பு

மக்கள் நலப் பணியாளர்கள் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை எதிர்மனுதாரர்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :4 ஆகஸ்ட் 2022, 2:20 am

 நமது நிருபர்

மக்கள் நலப் பணியாளர்கள் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை எதிர்மனுதாரர்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, தமிழக அரசின் நிலைப்பாட்டை தாக்கல் செய்யுமாறு கூறி நீதிபதிகள் அமர்வு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த சிவில் முறையீட்டு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை 2-ஆவது நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது. அப்போது, எதிர்மனுதாரர் விழுப்புரம் தன்ராஜ் உள்ளிட்டோர் தரப்பில் வழக்குரைஞர் ஹரிபிரியா பத்மபநாபன் ஆஜராகி, "மக்கள் நலப் பணியாளர்களுக்கு 2006 முதல் 2010 வரையிலான ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அரசு அளித்துள்ள புதிய முன்மொழிவுத் திட்டத்தில் அதுபோன்று சிறப்பு காலமுறை ஊதியம் ஏதும் இல்லை. அவர்கள் அதிகமான ஊதியம் பெற்றனர். ஆனால், 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு படி உள்பட ரூ.7,500 எனும் குறைந்த மதிப்பூதியம் தரும் முன்மொழிவு ஏற்புடையதாக இல்லை.
மேலும், அவர்கள் பணிபுரிந்த காலத்தில் அன்றைக்கு பணியில் சேர்ந்த ஊராட்சி எழுத்தர் தற்போது மாதம் ரூ.28 ஆயிரம் ஊதியம் பெறும் நிலையில், மிகக் குறைவான மதிப்பூதியம் அதுவும் காலமுறை ஊதியமின்றி தற்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும், டி.ஏ., குழு காப்பீடு, வருடாந்திர ஊதிய உயர்வு என பல வசதிகளை அவர்கள் பணிநீக்க நடவடிக்கைக்கு முன்னர் பெற்றனர். தற்போது அரசு அளித்துள்ள புதிய திட்ட முன்மொழிவில் அதுபோன்று ஏதும் இல்லை.
மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணிமூப்புப் பட்டியல் தயாரிக்கப்படும் என்றும், அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் இரவு காவலர், பதிவு எழுத்தர் போன்ற குறிப்பிட்ட பணியிடங்களில் நியமிக்கப்படுவார்கள் என முந்தைய அரசு உத்தரவுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைக் கருத்தில்கொண்டுதான் சென்னை உயர்நீதிமன்றம் எங்களுக்கு சாதமான தீர்ப்பை அளித்திருந்தது. மேலும், பணீநீக்கத்தின்போது, எங்களுக்கு வழங்கப்பட்ட ஐந்து மாத ஊதியத்தை கொடுத்திருந்தோம். அத்தொகையை தற்போதைய நாள் வரையிலான காலத்திற்கு வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும்' என்று அவர் வாதிட்டார்.
அப்போது, நீதிபதிகள் அமர்வு, "முந்தைய அரசாணைகளில் உள்ள அறிவிப்புக்கும், தற்போதைய அரசின் திட்ட அறிவிப்புக்கும் உள்ள பயன் இடைவெளி குறித்த ஒப்பீடு விவரங்கள் உள்ளதா' என்று கேள்வி எழுப்பினர். அதுகுறித்த விவரங்களைத் தருவதாக வழக்குரைஞர் கூறினார்.
இந்த வழக்கில் மற்றொரு எதிர்மனுதாரர் (இன்டர்வீனர்) தரப்பில் வழக்குரைஞர் நிஸாம் பாஷா ஆஜராகி, மக்கள் நலப் பணியாளர்கள் விவகாரத்தில் 1989-இல் வெளியிடப்பட்ட அரசாணையை
(ஜி.ஓ.) சுட்டிக்காட்டி வாதிட்டார்.
இதையடுத்து, மக்கள் நலப் பணியாளர்கள் விவகாரத்தில் தற்போது புதிய முன்மொழிவு திட்டத்தை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தியுள்ள நிலையில், ஆட்சி மாறும் போது மீண்டும் பணியில் இருந்து நீக்கப்படாமல் இருக்கும் வகையில், ஏதாவது கொள்கையளவில் சட்ட அனுமதி தர அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா என்பதைத் தெரிவிக்குமாறு தமிழக அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் வி.கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11-ஆம் தேதி மதியம் 2 மணிக்குத் ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.