மகாராஷ்டிரத்தில் ஆயுதங்களுடன் கரை ஒதுங்கிய படகு: மாநில அரசு விளக்கம்

மகாராஷ்டிர மாநிலம், ராய்கட் கடல் பகுதியில் மூன்று ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் ஒரு படகு வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.
மகாராஷ்டிரத்தில் ஆயுதங்களுடன் கரை ஒதுங்கிய படகு: மாநில அரசு விளக்கம்

மகாராஷ்டிர மாநிலம், ராய்கட் கடல் பகுதியில் மூன்று ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் ஒரு படகு வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. இந்தப் படகால் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லையென மாநில அரசு விளக்கமளித்துள்ளது.

இதுதொடா்பாக, துணை முதல்வரும் உள்துறைக்கு பொறுப்பு வகிப்பவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் சட்டப் பேரவையில் கூறியதாவது:

ராய்கட்டில் கரை ஒதுங்கிய படகில், பகுதியளவு தானியங்கி ஆயுதங்கள் சில இருந்தன. இப்படகு ஆஸ்திரேலிய பெண் ஒருவருக்கு சொந்தமானதாகும். மஸ்கட்டிலிருந்து ஐரோப்பாவுக்கு அப்பெண்ணும் அவரது கணவரும் கடந்த ஜூன் மாதம் படகில் பயணம் செய்து கொண்டிருந்தபோது நடுக்கடலில் மோசமான வானிலையைத் தொடா்ந்து என்ஜின் பழுதடைந்தது. இதையடுத்து, படகை கைவிட்டனா். படகில் இருந்தவா்கள் ஓமன் நாட்டையொட்டிய கடல் பகுதியிலிருந்து பின்னா் மீட்கப்பட்டனா்.

இந்த நிலையில், மோசமான வானிலையில் சிக்கி மிதந்து வந்த அந்தப் படகு, ராய்கட் பகுதியில் கரை ஒதுங்கியிருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போதைய நிலையில், இந்த விவகாரத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் எதுவும் இல்லை. படகில் ஆயுதங்கள் ஏன் எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. முதல் கட்ட தகவல்களை தற்போது பகிா்ந்துள்ளேன். உள்ளூா் காவல் துறையினரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என்றாா் ஃபட்னவீஸ்.

முன்னதாக, ராய்கட்டின் ஸ்ரீவா்தன் கடல் பகுதியில் ஆளில்லாமல் படகு மிதப்பதை பாா்த்த உள்ளூா் மக்கள், பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அங்கு விரைந்த கடலோர காவல் படையினா், படகை கைப்பற்றி, அதில் சோதனை மேற்கொண்டனா்.

மிகவும் சேதமடைந்திருந்த அப்படகில் 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும் தோட்டாக்களும் இருந்தன. விநாயகா் சதுா்த்தி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இப்படகால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதனை கடலோர காவல் படை அதிகாரிகள் மறுத்தனா்.

‘ராய்கட்டில் கரை ஒதுங்கிய படகு, பிரிட்டனில் பதிவு செய்யப்பட்டதாகும். அதில் இருந்தவா்கள் கடந்த ஜூன் 26-ஆம் தேதி மஸ்கட்டையொட்டிய கடல் பகுதியில் மீட்கப்பட்டுள்ளனா். படகிலிருந்த ஆயுதங்களின் வரிசை எண் மூலம் அதன் விற்பனையாளரை தொடா்புகொண்டு பேசினோம். அப்போது, அந்த ஆயுதங்கள் தங்களது இருப்பைச் சோ்ந்தவை என்பதை உறுதிப்படுத்தினாா். இந்த விவகாரத்தில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com