

ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் சுவர்களில் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
சர்வதேச மாணவர்கள் பயிலும் பல்கலைக் கழகத்தின் சுவர்களில், பிரிவினைவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆங்கிலத்தில் இவ்வாறு எழுதியதற்கு பல்கலைக் கழக துணை வேந்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தில்லியிலுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அனைத்துப் பகுதியிலிருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். வெளிநாட்டு மாணவர்கள் தங்கிப் பயிலும் சர்வதேச கல்வி நிலையமாகவும் ஜேஎன்யு திகழ்கிறது.
இந்நிலையில், பல்கலைக் கழகத்தின் சுவர்கள் மற்றும் பேராசிரியர்களின் அறைகளில் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. ''பிராமணர்களே பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறுங்கள்'', ''ரத்தம் சிந்தப்படும்'', ''நாங்கள் உங்களுக்காக வருகிறோம்'' என்பன போனற வாசகங்கள் சிவப்பு மையினால் எழுதப்பட்டுள்ளன. பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சில மாணவர்கள் இதனைச் செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஜேஎன்யு பல்கலைக் கழக துணை வேந்தர், பேராசிரியர் சாந்திஸ்ரீ டி. பண்டிட் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக் கழகத்தின் சுவர்களின் பிராமணர்களுக்கு எதிரான வாசகங்களுடன் காழ்ப்புணர்ச்சியை சிலர் எதிர்வினையாக வெளிப்படுத்தியுள்ளனர்.
பல்கலைக் கழக வளாகத்தினுள் இது போன்ற பிரிவினைவாத செயல்களுக்கு நிர்வாகம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. ஜேஎன்யு மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஜேஎன்யு நிர்வாகம் அனைவரிடமும் அரவணைப்பையும் சமத்துவத்தையுமே விரும்புகிறது. இதுபோன்ற செயல்கள் இனி தொடர்ந்தால் நிர்வாகம் தரப்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.