காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார்? போட்டிக்கு வந்த மற்றொரு மூத்த தலைவர்

அமரிந்தர் சிங் விலகிய பிறகு பஞ்சாப் எம்எல்ஏக்கள் பலர் தன்னை முதல்வராக்க விரும்பியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சுனில் ஜக்கார் பேசுவது போன்ற விடியோ வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தி (கோப்புப்படம்)
ராகுல் காந்தி (கோப்புப்படம்)

பஞ்சாபில் வரும் பிப்ரிவரி 20ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிப்பதில் பெரும் சிக்கல் நிலவிவருகிறது. பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங், தற்போது முதல்வராக உள்ள சரண்ஜித் சிங் சன்னி ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

அதேபோல, மூத்த தலைவர் சுனில் ஜக்காருக்கும் கட்சியில் பல்வேறு தரப்பினரின் ஆதரவு இருப்பதால் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பதில் தொடர் குழுப்பம் நிலவிவருகிறது. இந்நிலையில், அமரிந்தர் சிங் முதல்வர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு,  பஞ்சாப் எம்எல்ஏக்கள் பலர் தன்னை முதல்வராக்க விரும்பியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சுனில் ஜக்கார் பேசுவது போன்ற விடியோ வெளியாகியுள்ளது.

தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த விடியோ அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், காங்கிரஸ் பிரசார குழு தலைவராக உள்ள ஜக்கார், அளிப்பதற்கு தனக்கு எந்தவிதமான புகாரும் இல்லை என்றும் எது சரியோ கடவுள் அதையே செய்திருக்கிறார் என்றும் பஞ்சாபி மொழியில் அவர் பேசியுள்ளார்.

மேலும், முதல்வர் பொறுப்பிலிருந்து அமரிந்தர் விலகிய பிறகு, பெரும்பான்மை எம்எல்ஏக்கள் தன்னை முதல்வராக்க விரும்பியதாக ஜக்கார் குறிப்பிடுவது போல விடியோவில் பதிவாகியுள்ளது.

"46 எம்எல்ஏக்கள் எனக்கும், 16 பேர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவாவுக்கும், 12 பேர் பிரனீத் கவுருக்கும், 6 பேர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், 2 பேர் (சரண்ஜித் சிங்) சன்னிக்கும் வாக்களித்தனர்" என்றும் ஜக்கார் கூறியுள்ளார். அப்போது, அங்கு கூடியிருப்போர் சிரிக்கின்றனர். 

அமரிந்தருக்கு பிறகு அடுத்த முதல்வராக சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா தேர்ந்தெடுக்கப்படுவார் என அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது.

முன்னதாக, பிரதமர் மோடிக்கு ஏற்பட்டதாக கூறப்படும் பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் சன்னி தலைமையிலான அரசை ஜக்கார் கடுமையாக விமரிசித்திருந்தார். அதேபோல், பல்வேறு விவகாரங்களில், சன்னி அரசை அவருக்கு போட்டியாக கருதப்படும் நவ்ஜோத் சிங் சித்து கடுமையாக சாடியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com