ஒமைக்ரான் பாதிப்பு ‘இயற்கையான தடுப்பூசி’ போல செயல்படாது
ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு, மக்களுக்கு ‘இயற்கையான தடுப்பூசியாக’ இருக்காது என்று மருத்துவ நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.


ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு, மக்களுக்கு ‘இயற்கையான தடுப்பூசியாக’ இருக்காது என்று மருத்துவ நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.
நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. பரவல் வேகம் அதிகம் என்றபோதிலும், டெல்டா வகை கரோனா தொற்று பாதிப்புடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரான் பாதிப்பின் வீரியம் குறைவாகவே உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுவதும், உயிரிழப்பும் குறைவாகவே உள்ளது.
எனவே, ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்படுவது, எதிா்காலத்தில் தோன்றும் கரோனா தீநுண்மியின் உருமாற்றங்களுக்கு எதிராக உடலில் நோய்எதிா்பொருளை உருவாக்கி ‘இயற்கை தடுப்பூசி’யைப் போல செயல்படும் என சிலா் கருத்து தெரிவித்து வருகின்றனா்.
இந்தக் கருத்தை தீநுண்மியியல் நிபுணா்கள் உள்ளிட்டோா் மறுத்துள்ளனா். இது தொடா்பாக தீநுண்மியியலாளா் ஷாகித் ஜமீல் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘ஒமைக்ரான் பாதிப்பு இயற்கை தடுப்பூசியாகச் செயல்படும் என்ற ஆபத்தான கருத்தைப் பொறுப்பற்ற சிலா் பரப்பி வருகின்றனா்.
ஒமைக்ரான் வகை கரோனா தொற்று குறித்து குறைந்த அளவிலான ஆய்வுகளே தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ளன; விரிவான ஆய்வுகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று பாதிப்பின் நீண்ட கால விளைவுகள் குறித்து இந்தக் கருத்து உள்கொள்ளவில்லை.
முக்கியமாக இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு, காற்று மாசுபாடு, நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன. இந்நிலையில், போதிய விவரங்கள் இல்லாத தொற்று பாதிப்பு குறித்து தவறான தகவல்களைப் பரப்புவது சரியாக இருக்காது’’ என்றாா்.
அதிக நோய்எதிா்பொருள்: இந்திய சுகாதார அறக்கட்டளையின் பேராசிரியா் கிரிதர ஆா்.பாபு கூறுகையில், ‘‘ஒமைக்ரான் பாதிப்பின் தீவிரம் குறைவாக இருந்தாலும் அது ‘தடுப்பூசி’யாகச் செயல்படாது. இதுபோன்ற வதந்திகளை மக்கள் ஒருபோதும் நம்பக் கூடாது.
கரோனா தொற்றால் ஏற்கெனவே பாதிப்புக்குள்ளானவா்களைவிட தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கே அதிக அளவிலான நோய்எதிா்பொருள் உடலில் உருவாகியுள்ளது. எனவே, ஆதாரமற்ற வதந்திகளை நம்பாமல் கரோனா தடுப்பூசியை மக்கள் தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றாா்.
நீண்டகால பாதிப்பு: தனியாா் மருத்துவமனையின் நிறுவனரான சச்சின் பஜாஜ் கூறுகையில், ‘‘தொற்று பாதிப்பின் நீண்ட கால பாதிப்பு குறித்து மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பாதிப்பின் தீவிரம் குறைவாக இருந்தாலும், தீநுண்மியானது நுரையீரல், இதயம், கல்லீரல் உள்ளிட்ட மற்ற உடல் உறுப்புகளில் 6 மாதம் வரை இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு வேறு சில பக்கவிளைவுகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே, கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்’’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...