நெஞ்சை பதற வைக்கும் பிகாரின் திருட்டுக் கிராமம்

பிகார் மாநிலம் கதிஹார் மாவட்டம் கோதா பகுதிக்கு உள்பட்ட ஜூராப்கஞ்ச் கிராமம், பிகாரில் மட்டுமல்ல, அண்டை மாநிலங்களில் நடக்கும் பல்வேறு குற்றச்சம்பவங்களின் மையப்புள்ளியாக விளங்குகிறது என்றால் அது பொய்யில்
நெஞ்சை பதற வைக்கும் பிகாரின் திருட்டுக் கிராமம் (கோப்புப்படம்)
நெஞ்சை பதற வைக்கும் பிகாரின் திருட்டுக் கிராமம் (கோப்புப்படம்)


பாட்னா: பிகார் மாநிலம் கதிஹார் மாவட்டம் கோதா பகுதிக்கு உள்பட்ட ஜூராப்கஞ்ச் கிராமம், பிகாரில் மட்டுமல்ல, அண்டை மாநிலங்களில் நடக்கும் பல்வேறு குற்றச்சம்பவங்களின் மையப்புள்ளியாக விளங்குகிறது என்றால் அது பொய்யில்லை.

இந்த கிராமத்திலிருந்து இயங்கும் திருட்டுக் கும்பலானது, ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவி தனது திருட்டுப் பணியை அயராது செய்து வருகின்றன.

இந்த மாநிலங்களில், திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் கும்பலைத் தேடும் காவலர்கள், 'கோதா கும்பல்' என்று அடைமொழியிட்டு தங்களது பணியை தொடங்குமளவுக்கு அவர்கள் புகழ்பெற்றவர்களாக உள்ளனர்.

இது ஏதோ ஒரு சாதாரண திருட்டுக் கும்பல் என்று நினைக்கமுடியாத அளவிற்கு இவர்களது பின்னணி உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் பெரியவர்கள், தங்கள் பகுதி சிறார்களுக்கு எப்படி திருடுவது, திருட்டில் மாட்டிக் கொண்டால் தப்புவது, உண்மையை வெளிக்கொணர செய்யும் துன்புறுத்தல்களை எவ்வாறு தாங்குவது என்பது குறித்து மிகச் சிறப்பான, பயிற்சியை வழங்கி, தங்களது குலதொழிலை வளர்க்க அரும்பாடுபடுகிறார்கள்.

சுமார் 1,500 பேர் வசிக்கும் ஜுராப்கஞ்ச் கிராம், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. அந்த கிராமத்தை வெளியிலிருந்து பார்த்தால் ஒரு பிகார் கிராமமாகத் தெரிந்தாலும், உள்ளே சென்றால் வளர்ந்த நகரம் போல ஜொலிக்கிறது. பெரிய பெரிய கட்டடங்கள், கட்டங்களுக்குள் இருக்கும் வீடுகளில் விலை உயர்ந்த வீட்டு உபயோகப் பொருள்கள், சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கான அனைத்து அம்சங்களும் நீக்கமற நிறைந்துள்ளன. இது அண்டை கிராம மக்களை பொறாமைப்படச் செய்யும் அளவுக்கு புகழடைந்திருப்பதும் வருத்தத்துக்குரிய விஷயம்.

முதலில் ஒரு திருட்டுக் கும்பல் உருவாகும். அது சின்ன சின்ன குற்றங்களான பிக்பாக்கெட், கடைகள், வீடுகளில் திருடுவது என ஆரம்பிக்கும். பிறகு திருட்டுச் சம்பவத்தில் நல்ல அனுபவம் பெற்றுவிட்டபிறகு, வங்கிக் கொள்ளை, கொள்ளை, மிகப்பெரிய நகைக்கடைகளில் கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டு, திருட்டில் பட்டம்பெற்றுவிடுவார்கள்.

இது குறித்து காவலர்கள் கூறுகையில், இந்த கிராமத்தைச் சேர்ந்த குற்றவாளிகள், தாங்கள் குற்றச் செயலை செய்ய புறப்படும்போது, அவரவர், தங்களது குல தெய்வத்துக்கு பூஜைகள் செய்து, அதில் காரிய சித்தி கிடைக்கும் என்ற சமிக்ஜை கிடைத்ததும் புறப்படுகிறார்கள். திருட்டில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து, ஒரு குறிப்பிட்ட தொகையை கும்பலின் தலைவர் பிடித்தம் செய்து கொள்கிறார்கள்.

ஒருவேளை, திருட்டில் ஈடுபடும்போது, யாரேனும் பிடிபட்டால், நீதிமன்ற பிணைக்கு அந்தத் தொகை பயன்படுத்தப்படுகிறது. 

இது குறித்து காவல்துறையினர் மேலும் கூறுகையில், இந்த கிராமத்தைச் சேர்ந்த திருட்டுக் கும்பலின் பட்டியல் தயாரிக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் வசிக்கும் பெண்கள், சந்தைக்கு வரும் போது ஏராளமான தங்க நகைகளை அணிந்தபடி, கையில் பெரும் தொகையுடன் வருவதையும் காவலர்களின் கண்காணிப்பில் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த கிராமத்தில் திருட்டுக் கும்பலின் வாழ்க்கை முறையைப் பிடிக்காத சிலர், அந்த கிராமத்திலிருந்து தங்களது இருப்பிடங்களை மாற்றிக் கொண்டு வெளியேறிவிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com