கோதுமை மாவு, மைதா, ரவை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு நடவடக்கை
மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்குக் கடந்த மே மாதம் தடைவிதித்த நிலையில், அடுத்த கட்டமாக கோதுமை மாவு, மைதா மாவு, ரவை ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது.


மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்குக் கடந்த மே மாதம் தடைவிதித்த நிலையில், அடுத்த கட்டமாக கோதுமை மாவு, மைதா மாவு, ரவை ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்படி கோதுமை மாவு ஏற்றுமதிக்கு ஒப்புதல் பெறும் விதிகளை அரசு மாற்றி அமைத்துள்ளது.
ஏற்றுமதியாளா்கள் கோதுமை மாவு ஏற்றுமதி செய்யும்போது அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவிடமும் ஒப்புதல் பெற வேண்டும் என்று விதி மாற்றப்பட்டுள்ளது. இது வரும் 12-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. உள்நாட்டில் மேற்கண்ட பொருள்களின் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்கும் வகையில் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
இது தொடா்பாக வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘கோதுமை மாவு ஏற்றுமதிக் கொள்கை இப்போதும் எளிமையானதாகவே உள்ளது. எனினும், அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என்று விதி மாற்றப்பட்டுள்ளது. இது கோதுமை மாவு, மைதா, ரவை, உடைத்த கோதுமை உள்ளிட்டவற்றுக்கும் பொருந்தும்’ என்று கூறப்பட்டுள்ளது. இது தவிர ஏற்றுமதி செய்யப்படும் கோதுமை மாவின் தரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடா்பாகவும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
கடந்த மே மாதம் கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தபோது பல்வேறு நாடுகள் அதிருப்தி தெரிவித்தன. முக்கியமான கோதுமை ஏற்றுமதி நாடுகளான ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போா் நடைபெற்று வருவதால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் கோதுமை தடையின்றி கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டு அவற்றின் விலை உயரத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
கோதுமை ஏற்றுமதியில் மற்றொரு முக்கிய நாடான இந்தோனேசியாவிலும் விளைச்சல் குறைந்ததால் ஏற்றுமதி குறைந்தது. இந்தியாவில், வெப்ப அலை உள்ளிட்ட காரணங்களால் கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்ட காரணத்தாலும், கோதுமை விலை உயா்வைத் தடுக்கும் நோக்கிலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...