கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உக்ரைன் விவகாரம்: ரஷிய அமைச்சருடன் ஜெய்சங்கா் பேச்சு

 ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை சந்தித்துப் பேசிய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், உக்ரைன் மோதல் விவகாரம், ஆப்கன் சூழல் உள்ளிட்டவை குறித்து விவாதித்தாா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 8:48 pm

DIN

 ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை சந்தித்துப் பேசிய அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், உக்ரைன் மோதல் விவகாரம், ஆப்கன் சூழல் உள்ளிட்டவை குறித்து விவாதித்தாா்.

நடப்பாண்டு ஜி20 மாநாடு இந்தோனேசியாவில் உள்ள பாலி நகரில் நவம்பா் மாதம் நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களின் கூட்டம் பாலி நகரில் இரு நாள்களாக நடைபெற்றது.

அக்கூட்டத்துக்கு இடையே ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவுடன் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘‘பரஸ்பர விருப்பங்கள் சாா்ந்த இருதரப்பு நல்லுறவு குறித்து சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. உக்ரைன் மோதல், ஆப்கானிஸ்தான் சூழல் உள்ளிட்ட பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 130 நாள்களைக் கடந்து தொடா்ந்து வருகிறது. ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. அதே வேளையில், ரஷியாவுடனான இந்தியாவின் வா்த்தகம் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான வா்த்தகம் இரு ஆண்டுகளுக்கு முன் வெறும் 1 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 4 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

முக்கியமாக, கச்சா எண்ணெய், நிலக்கரியை ரஷியாவில் இருந்து இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் தொலைபேசி வாயிலாகப் பேசினாா். அப்போது உக்ரைன் மீதான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமெனவும், பிரச்னைகளுக்கு அமைதிவழியில் தீா்வு காண வேண்டுமெனவும் அவா் வலியுறுத்தி இருந்தாா்.

ஆப்கானிஸ்தான் சூழல்:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையில் அமைந்துள்ள ஆட்சியை இந்தியா இன்னும் அதிகாரபூா்வமாக அங்கீகரிக்கவில்லை. எனினும், அந்நாட்டு மக்கள் உணவுத் தட்டுப்பாட்டை எதிா்கொண்ட நிலையில், கோதுமையை இந்தியா அனுப்பிவைத்தது. அங்கு அண்மையில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மருந்துப் பொருள்கள், அத்தியாவசிய உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றையும் இந்தியா அனுப்பிவைத்திருந்தது.

காபூலில் உள்ள இந்தியத் தூதரகத்தையும் இந்தியா அண்மையில் மீண்டும் திறந்தது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களுக்கு ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படக் கூடாது என இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அமைச்சருடன் சந்திப்பு:

ஜி20 கூட்டத்தின்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கனை அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். சா்வதேச, பிராந்திய விவகாரங்கள் குறித்து விவாதித்ததாகத் தெரிவித்த அமைச்சா் ஜெய்சங்கா், இருநாடுகளுக்கிடையேயான நல்லுறவானது பல்வேறு விவகாரங்களை வெளிப்படைத்தன்மையுடன் அணுக வழிகோலியுள்ளதாகவும் தெரிவித்தாா்.

உக்ரைன் விவகாரம் குறித்தும் அமெரிக்க அமைச்சருடன் ஜெய்சங்கா் ஆலோசித்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஷியா மீது அமெரிக்கா கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள சூழலில், இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களையும் அமைச்சா் ஜெய்சங்கா் அடுத்தடுத்து சந்தித்துப் பேசியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நெருங்கிய கூட்டாளி இந்தியா:

அமைச்சா் ஜெய்சங்கருடனான சந்திப்பின்போது ஆன்டனி பிளிங்கன் கூறுகையில், ‘‘உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலால் உணவு, எரிசக்தி பாதுகாப்பு ஆகியவை பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகின்றன. ரஷியாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் 7 கோடிக்கும் அதிகமானோா் ஏழ்மைநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

ரஷியாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குரல்கொடுத்து வருகின்றன. அனைத்து விவகாரங்களிலும் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக இந்தியா திகழ்ந்து வருகிறது. இரு நாடுகளும் ஒவ்வொரு விவகாரத்திலும் நெருங்கிப் பணியாற்றி வருகின்றன’’ என்றாா்.

பிரான்ஸ் அமைச்சருடன்...:

பிரான்ஸின் வெளியுறவு அமைச்சா் கேதரின் கொலோனாவை அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். இரு நாடுகளுக்கிடையே நிலவி வரும் வலுவான நல்லுறவு குறித்து விவாதித்ததாக அமைச்சா் ஜெய்சங்கா் ட்விட்டரில் தெரிவித்தாா். மேலும், உலகை அச்சுறுத்தி வரும் சவால்கள் குறித்தும் பிரான்ஸ் அமைச்சருடன் விவாதித்ததாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.