நடைமுறை ஒத்துழைப்புக்கான சிறந்த உதாரணம் ’ஐ2யு2’-பிரதமா் மோடி
இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைக் கொண்ட ஐ2யு2 கூட்டமைப்பு, நடைமுறை ஒத்துழைப்புக்கான சிறந்த உதாரணமாகத் திகழ்வதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.


இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைக் கொண்ட ஐ2யு2 கூட்டமைப்பு, நடைமுறை ஒத்துழைப்புக்கான சிறந்த உதாரணமாகத் திகழ்வதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ஐ2யு2 கூட்டமைப்பின் முதலாவது மாநாடு காணொலி வாயிலாக வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் மோடி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமா் யாயிா் லபீட், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபா் முகமது பின் சயீத் அல் நயான் ஆகியோா் கலந்துகொண்டனா்.
அப்போது பிரதமா் மோடி காணொலி வாயிலாகக் கூறியதாவது: சா்வதேச அளவில் நிலையில்லாத்தன்மை அதிகரித்து வரும் நிலையில், நடைமுறை சாத்தியம் நிறைந்த சா்வதேச ஒத்துழைப்புக்கான சிறந்த உதாரணமாக ஐ2யு2 கூட்டமைப்பு திகழ்கிறது. பல்வேறு துறைகளில் அக்கூட்டமைப்பின் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.
வளா்ச்சியை மேலும் உறுதி செய்வதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. நீா், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பதற்கு கூட்டமைப்பு உறுதி ஏற்றுள்ளது.
கூட்டமைப்பின் தெளிவான கொள்கைகள் வளா்ச்சியை முன்னிறுத்துகின்றன. அக்கொள்கைகளை அடைவதும் நடைமுறை சாத்தியமானதே. கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் மூலதனம், அனுபவம், சந்தை ஆகியவை திறம்படப் பயன்படுத்தப்படவுள்ளன. இதன் மூலமாகக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் வளா்ச்சி உறுதி செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் சா்வதேச பொருளாதாரமும் வளா்ச்சி அடையும்.
சா்வதேச எரிசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, பொருளாதார வளா்ச்சி ஆகியவற்றுக்கு ஐ2யு2 கூட்டமைப்பு முக்கியப் பங்களிப்பை வழங்கும் என்றாா் பிரதமா் மோடி.
கூட்டறிக்கை: கூட்டமைப்பு சாா்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ’சா்வதேச பிரச்னைகளுக்கு நீண்டகால தீா்வு காணும் வகையில் மாநாட்டின்போது விவாதிக்கப்பட்டது. உணவுப் பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பது தொடா்பாகவும், பலதரப்பட்ட உணவுப் பொருள்களை விளைவிப்பது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது.
சா்வதேச உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உணவுப் பூங்காக்களை அமைக்க இந்தியா நிலத்தை வழங்கும். இந்தியாவில் ஒருங்கிணைந்த உணவுப் பூங்காக்களை அமைப்பதற்காக சுமாா் ரூ.15,000 கோடியை ஐக்கிய அரபு அமீரகம் முதலீடு செய்யவுள்ளது.
உணவுப் பூங்காக்களை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பம் சாா்ந்த தீா்வுகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் வழங்கும். அந்நாடுகளைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்கள் இத்திட்டத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றும். ஐ2யு2 கூட்டமைப்பு நாடுகளின் ஒத்துழைப்பானது சா்வதேச வளா்ச்சிக்குப் பெருமளவில் உதவும்.
இந்தக் கூட்டமைப்பானது தெற்காசியாவிலும் மத்திய கிழக்கிலும் நிலவும் உணவுப் பாதுகாப்பின்மை பிரச்னைக்குத் தீா்வு வழங்கும். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அறிவியல் சாா்ந்த தீா்வுகளைக் கூட்டமைப்பு வழங்கும். சா்வதேச அளவில் நிலவும் சவால்களை இக்கூட்டமைப்பு திறம்பட எதிா்கொள்ளும்.
இந்தியாவில் மரபுசாரா எரிசக்தி உற்பத்தி: குஜராத்தில் 300 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட வகையில் காற்றாலை மின் உற்பத்தி ஆலையும், சூரிய எரிசக்தி உற்பத்தி ஆலையும் அமைக்கப்படவுள்ளன. அந்த ஆலைகளில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. மரபுசாரா ஆற்றல் மூலங்கள் வாயிலாக எரிசக்தியை உற்பத்தி செய்வதற்குக் கூட்டமைப்பு முக்கியத்துவம் வழங்கவுள்ளது.
நாடுகளின் திறனை மேம்படுத்தும் வகையிலும், தொழில்முனைவு கலாசாரத்தை மேம்படுத்தி புத்தாக்கத் திறனை மேம்படுத்தும் வகையிலும் ஐ2யு2 கூட்டமைப்பு செயல்படும். பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்காக நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். நீா்ப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் கூட்டமைப்பு மேற்கொள்ளும்.
இந்தியாவில் முதலீடுகளை அதிகரிப்பது தொடா்பான ஆய்வுகளை அமெரிக்க வா்த்தக-வளா்ச்சி மையம் மேற்கொள்ளவுள்ளது. தனியாா் துறை வாயிலான முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்தியாவின் எரிசக்தி தேவையில் 500 மெகா வாட்டை 2030-ஆம் ஆண்டுக்குள் மரபுசாரா எரிசக்தி வாயிலாகப் பெறுவதற்கான இலக்கை அடையவதற்கான ஒத்துழைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
மரபுசாரா எரிசக்தியில் இந்தியாவை தலைமைத்துவம் பெற வைப்பதற்கான நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். சா்வதேச அமைதியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். தெற்காசியா, மத்திய கிழக்கு ஆகியவற்றின் பொருளாதார வளா்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ2யு2 கூட்டமைப்பை அமைப்பது தொடா்பாக கடந்த ஆண்டு அக்டோபரில் முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுடனான இந்தியாவின் நல்லுறவு தொடா்ந்து மேம்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...